Last Updated : 27 Aug, 2023 09:21 AM

 

Published : 27 Aug 2023 09:21 AM
Last Updated : 27 Aug 2023 09:21 AM

சிறந்த மருத்துவர்கள் 40 பேருக்கு விரைவில் விருது - ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

படங்கள் எஸ்.சத்தியசீலன்

சென்னை: நான்கு ஆண்டுகளுக்கும் சேர்த்து தமிழக அரசு சார்பில் 40 மருத்துவர்களுக்கு சிறந்த மருத்துவர் விருது விரைவில் வழங்கப்படும் என்று ‘இந்து தமிழ் திசை'–மருத்துவ நட்சத்திரம் விருது வழங்கும் விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் மருத்துவப் பணியை சேவை மனப்பான்மையோடும் அர்ப்பணிப்போடும் ஆற்றிவரும் மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதுகள் கடந்த இரண்டாண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மூன்றாவது ஆண்டாக டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை – மருத்துவ நட்சத்திரம் 2023’ விருதுகள் வழங்கும் விழா சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்கம் - தமிழ்நாடு, ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், யுனைடெட் எஜுகேஷனல் அண்ட் சோஷியல் வெல்ஃபர் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்திய இவ்விழாவின் ஒருங்கிணைப்பு பார்ட்னராக ரஷ்யன் கலாச்சார மையம் இணைந்திருந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 102 மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது மற்றும் 6 மருத்துவர்களுக்கு ‘முன்மாதிரி மருத்துவர்’ விருதையும் வழங்கி கவுரவித்தார்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் தொடர்ந்து நடைபெற்று வரும் இது போன்ற விருது வழங்கும் விழாவில் நானும் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை தொடர்ச்சியாக அளிக்கும், இந்த நிர்வாகத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்களின் தேவையும் சேவையும் எந்த அளவுக்கு தேவை என்பது கடந்த 3 ஆண்டுகளில் மக்களால் உணரப்பட்டது.

மிகச் சிறந்த மருத்துவர்களை அடையாளம் கண்டு இங்கே விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருது பெற்றுள்ள மருத்துவர்கள் அனைவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விருதுகள் கொடுப்பது என்பது ஏற்கெனவே செய்த சாதனைகள், சேவைகளைக் கடந்து இனிமேலும் சாதிக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும் வகையில் இந்த விருது பயன்படும் என்று நான் நம்புகிறேன்.

இந்திய மருத்துவ சங்கம்–தமிழ்நாடு தலைவர் மருத்துவர் டி.செந்தமிழ் பாரி கோரிக்கை மனுவை என்னிடம் கொடுத்துள்ளார். அதில் பிரதான கோரிக்கையாக தமிழகத்திலுள்ள மருத்துவ சட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளை மூடும் நிலை இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் எந்த மருத்துவமனையும் விசாரணை இன்றி மூடப்படவில்லை. அப்படி மூடியிருப்பதை தெரிவித்தால் உடனடியாக அதற்கு தீர்வு காணப்படும்.

கருமுட்டை விவகாரத்தில் தமிழகத்தில் 4 மருத்துவமனைகள், ஆந்திரா, கேரளாவில் தலா ஒன்றுவீதம் மொத்தம் 6 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையை மட்டும் மூடி வையுங்கள், மற்ற சேவைகளை முடக்க வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறேன். எந்தமருத்துவமனையையும், எந்த மருத்துவரையும் இந்த அரசு எந்த நோக்கத்துக்காகவும் பழிவாங்காது. அதேநேரத்தில் பொதுமக்களுக்கு எந்தவிதமான சிறிய பாதிப்பும் இல்லாத வகையில் நாமும் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதுஇந்த சேவைக்கு நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழியாகும்.

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணங்கள் போன்றவற்றில் சிறிய குறைகள் இருப்பதாக மனுவில் சொல்லப்பட்டுள்ளது. அதற்காக, தமிழக அரசு குழு அமைத்துள்ளது. அந்த குழுவின் கூட்டம்விரைவில் நடக்கவுள்ளது. தங்களுடைய குறைகளைக்குழுவிடம் சொல்லலாம். தீர்வு காணப்படும்.

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் 10 பேருக்கு சிறந்த மருத்துவர் விருது கொடுக்க வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக கொடுக்கப்படவில்லை என்று மனுவில் தெரிவித்துள்ளனர். அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 4 ஆண்டுகளுக்கும் சேர்த்து 40 மருத்துவர்களுக்கு சிறந்த மருத்துவர் விருது மற்றும்விருது தொகை ரூ.50 ஆயிரம் வழங்கும் விழா மிகவிரைவில் நடைபெறும் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திய மருத்துவ சங்கம் – தமிழ்நாடு மதிப்புறு மாநில செயலாளர் மருத்துவர் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன், இந்திய - ரஷ்ய தொழில் வர்த்தக சபை செயலாளர் தங்கப்பன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தலைமை இயக்கக அலுவலர் சங்கர் வி.சுப்பிரமணியம், பொதுமேலாளர் டி.ராஜ்குமார் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் விழாவை தொகுத்து வழங்கினார்.

துணை நின்ற டெட்டால் நிறுவனம்

விருது விழாவில் ரெக்கிட் (SOA) நிறுவன வெளிவிவகாரங்கள் மற்றும் கூட்டாண்மைக்கான இயக்குநர் ரவி பட்னாகர் பேசியதாவது: கரோனா பெருந்தொற்று முதல் அலையின்போது ஏற்பட்ட தாக்கம் நன்றாகவே நினைவிருக்கிறது. இதற்கான சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி.

அவர்களே கரோனாவுக்கு பின்பும் மருத்துவ தேவையறிந்து சிறப்பாக செயலாற்றினர். இது அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றி தெரிவிக்கும் நிகழ்வு. கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டபோது, மத்திய அரசுக்கு மிகவும் ஆதரவாக டெட்டால் நிறுவனம் செயல்பட்டது.

இதேபோல் சர்வதேச அளவிலும் மக்களுக்கான சுகாதார திட்டங்களில் தொடர்ச்சியாக பங்கெடுத்து வருகிறோம். இதையொட்டி, இவ்விழாவில் பங்குபெறுவதற்கான வாய்ப்பை அளித்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுதா சேஷய்யன்

பாராட்டத்தக்க முயற்சி: சுதா சேஷய்யன்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் சென்னையில் நடைபெற்ற மருத்துவ நட்சத்திரம் விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மருத்துவர் சுதா சேஷய்யன் பேசியதாவது:

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதுகள் வழங்கு விழா முதன்முதலில் 2021-ம் ஆண்டுதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் தான் நடைபெற்றது. அந்த விழாவில் இருக்கக்கூடிய வாய்ப்புஎனக்கு இருந்ததால், அதற்காகவே இப்போது பெருமிதப்படுகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.

மருத்துவ சேவை என்பது சாதாரணமானது அல்ல. மனரீதியான கவலை, ஆதங்கம் எதுவாக இருந்தாலும் அதனை உள்ளுக்குள்ளேயே வைத்து அடக்கிக்கொண்டு, நோயாளிகளிடம் எந்த கோபத்தையும் காட்டாமல்தான் மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். அப்பேற்பட்ட பணிக்காக மருத்துவர்களை மனமார பாராட்டுவது மட்டுமல்ல, ஒவ்வொருவரின் பாதம் தொட்டு பணிந்து நான் வாழ்த்துகிறேன்.

செந்தமிழ் பாரி

அரசின் தலைச்சன் குழந்தை மருத்துவர்கள்: மருத்துவர் டி.செந்தமிழ் பாரி கருத்துரை

விருது வழங்கும் விழாவில் இந்திய மருத்துவ சங்கம் - தமிழ்நாடு தலைவர் மருத்துவர் டி.செந்தமிழ் பாரி பேசியதாவது: இந்திய அளவில் சுகாதாரத் துறையில் முதன்மையான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதற்கு முக்கிய காரணம் தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டங்களாகும்.

இந்த இரண்டு திட்டங்களும் சிறப்பாக நடைபெற்று தமிழகம் முதன்மை மாநிலமாக வருவதற்கு மருத்துவர்களின் உழைப்பும் பணியாளர்களின் சேவையுமே காரணம். அரசுக்கு அனைவருமே குழந்தைகள் தான். ஆனால் மருத்துவர்களோ தலைச்சன் குழந்தை. இந்த தலைச்சன் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் தாயுடன் சேர்ந்து, பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ள முடியும்.

மருத்துவர், ஆசிரியர்களின் சேவை அளப்பரியது - ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் நெகிழ்ச்சி

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் பேசியதாவது: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். அவர் எங்களுடைய குடும்பத்தில் ஒருவராகி விட்டார்.

இந்த விருது விழாவின் முதலாம் ஆண்டில் இருந்தே எங்களுடன் இருக்கிறார். மருத்துவர்களுக்கான மருத்துவ நட்சத்திரம் விருது வழங்குவது போலவே, ஆசிரியர்களுக்கும் அன்பாசிரியர் விருது வழங்கும் விழாவை நாங்கள் நடத்துகிறோம்.

இவர்கள் இருவரின் சேவைகள் அளப்பரியது. இந்த ஆண்டு முதல் முன்மாதிரி மருத்துவர் விருது வழங்கப்படுகிறது. மருத்துவர்களிடம் அற்புதமான தமிழ் ஆற்றல் உள்ளது. மருத்துவ சேவை மட்டுமில்லாமல், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயங்களில் பங்குபெற்று சமூகத்துக்கு நல்ல விஷயங்களை செய்ய வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x