Published : 27 Aug 2023 04:08 AM
Last Updated : 27 Aug 2023 04:08 AM

திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்தும் விதிகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மோசடி சம்பவங்களால் பெண்கள் ஏமாறுவதை தடுக்க திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

பெண் டாக்டர் ஒருவரை திருமணம் செய்வதாகக்கூறி 80 பவுன்நகை மற்றும் ரூ.68 லட்சம் மோசடிசெய்ததாக பிரசன்னா என்ற சக்கர வர்த்தி என்பவர் மீது சென்னை கேளம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி பிரசன்னா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பிரசன்னா தரப்பில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டதன் மூலம் தனக்கும் அந்த டாக்டருக்கும் பழக்கம் ஏற்பட்டது என்றும், அவரைதிருமணம் செய்ய மறுத்ததன் காரணமாக தனக்கு எதிராக புகார் அளித்துள்ளதாக வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில், கிறிஸ்தவ திருமண தகவல் இணையதளத்தில் அந்த பெண் டாக்டர் பதிவுசெய்து வைத்துள்ளார். அதை பயன்படுத்திக் கொண்டு அந்த டாக்டரைபிரசன்னா திருமணம் செய்வதாகக்கூறி ஏமாற்றியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

கோடிக் கணக்கான ரூபாய் மோசடி: பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் தரப்பில், பிரசன்னா தன்னை டாக்டர்எனக்கூறித்தான் தன்னிடம் பழகியதாகவும், இந்நிலையில் தன்னிடம் இருந்து ரூ.68 லட்சம் மற்றும் 80 பவுன் தங்க நகைகளையும் அவர் அபகரித்துக் கொண்டதாகவும், வயது முதிர்ந்த டாக்டர்கள், செவிலியர்கள்,

விவாகரத்து ஆனவர்களை குறிவைத்து மோசடி செய்வதுதான் பிரசன்னாவின் வாடிக்கை என்றும், இதுவரை 17-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார் என்றும், எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

பெண்களே ஏமாற்றப்படுகின்றனர்: இதையடுத்து நீதிபதி, முன்ஜாமீன் கோரி பிரசன்னா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ‘‘திருமண இணையதளங்கள் தொடர்பான மோசடிகளில் பெரும்பாலும் பெண்களே ஏமாற்றப்படுகின்றனர். அதுவும் விவாகரத்தான பெண்கள் எளிதாக ஏமாற்றப்படுகின்றனர். இதுபோன்ற இணையதளங்களை கட்டுப்படுத்த எந்த ஒரு சட்டமோ, விதிகளோ இதுவரையிலும் உருவாக்கப்படவில்லை.

ஆன்லைனில் திருமணம் தொடர்பாக பதிவு செய்து வைக்கும் ஆணோ அல்லது பெண்ணோ அவர்களது ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன்தான் பதிவு செய்ய வேண்டும் என்ற விதி இருந்தால் போலியாக பதிவு செய்யப்படுவது தவிர்க்கப்படும். அத்துடன் இதுபோன்ற மோசடி சம்பவங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

மீறி நடந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் வழிவகுக்கும். எனவே மோசடி சம்பவங்களால் பெண்கள் ஏமாறுவதைத் தடுக்க திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் விதிகளை வகுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x