Published : 23 Dec 2017 11:24 AM
Last Updated : 23 Dec 2017 11:24 AM

புதுச்சேரியில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது: புத்தகம் நுழையும் வீட்டில் வன்முறை, துன்பம் வெளியேறும்- எழுத்தாளர் ரவிக்குமார் பேச்சு

புத்தகம் நுழையும் வீட்டில் வன்முறை, துன்பம் வெளியேறும் என்று எழுத்தாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் தெரிவித்தார்.

புதுச்சேரி எழுத்தாளர் புத்தக சங்கத்தின் சார்பில் வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் 10 நாட்கள் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியின் தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. எழுத்தாளர் ரவிக்குமார் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: புதுச்சேரி புத்தக கண்காட்சியில் 17 புதிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. முன்னணி பதிப்பகங்கள் இதில் பங்கேற்றுள்ளன. மொத்தம் 102 விற்பனை கடைகள் உள்ளன. அத்துடன் நூல்களுக்கு பத்து சதவீத சிறப்பு தள்ளுபடி தரப்படுகிறது. புத்தகங்களை நேசிக்க குழந்தைகளுக்கு பெற்றோர் கற்று தருவது அவசியம். இதை செய்தால் மக்களை அவர்கள் நேசிப்பார்கள். உண்மையில் புத்தகம் நுழையும் வீட்டில் துன்பங்கள், வன்முறை வெளியேறும்.

இக்கண்காட்சியில் இந்திய அரசு வெளியீடுகளும் உள்ளன. பள்ளி மாணவர்களை பெற்றோரும், பள்ளிகளும் கண்காட்சியை காண அழைத்து வருவது அவசியம். அத்துடன் பள்ளி நூலகங்களும் நூல்களை வாங்கினால் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்று குறிப்பிட்டார்.

இக்கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி முதலான இந்திய பகுதிகளில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ் முதலான வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 102 புத்தக வெளியீட்டு மற்றும் விற்பனையாளர்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி எழுத்தாளர்களின் நூல்களுக்கு தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

அதிக புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு புத்தக விரும்பி, புத்தக ராஜா, புத்தக ராணி, புத்தக மகாராஜா, புத்தக மகாராணி, புத்தக இளவரசன், புத்தக இளவரசி விருதுகளும், எழுத்தாளர்கள் மற்றும் புத்தக நிறுவனங்களுக்கு புத்தக சேவா ரத்னா விருதும் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில் மலேசியாவைச் சேர்ந்த முனைவர் ராமநாயகம் மற்றும் தேவரக்கா, சிங்கப்பூரைச் சேர்ந்த இலியாஸ், புதுவை தமிழ்சங்க தலைவர் முத்து, பேராசிரியர் பாஞ் ராமலிங்கம் மற்றும் சங்கரன், முருகன், அப்துல் மஜீத் ஆகியோர் பங்கேற்றனர்.

புதிய நூல்கள்

மத்திய அரசின் புத்தக வெளியீட்டு பிரிவு புதிய நூல்கள் அரங்கில் உள்ளன. இங்கு பத்து முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி தரப்படுகிறது. பல முக்கிய பதிப்பகத்தின் புதிய நூல்களும் அரங்கில் வைக்கப்பட்டுள்ளன. ஆன்மிகம், கல்வி, இலக்கியம், ஆங்கில நூல்கள் உட்பட ஏராளமான நூல்கள் இடம் பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x