Published : 10 Dec 2017 09:15 AM
Last Updated : 10 Dec 2017 09:15 AM

வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது எழுந்த சர்ச்சைகளால் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி மாற்றம்: வேலுச்சாமிக்கு பதில் பிரவீன் பி.நாயர் நியமனம் - கண்காணிப்பு குழுக்களுக்கு ராஜேஷ் லக்கானி கடும் எச்சரிக்கை

வேட்புமனு பரிசீலனையின்போது சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பிரவீன் பி.நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த நவம்பர் 27-ம் தேதி தொடங்கி டிசம்பர் 4-ம் தேதி நிறைவடைந்தது. மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி பெற்றுக்கொண்டார். டிசம்பர் 5-ம் தேதி நடந்த மனுக்கள் பரிசீலனையின்போது, நடிகர் விஷால் அளித்த மனுவை முன்மொழிந்த இருவர், தாங்கள் கையெழுத்திடவில்லை என்று தெரிவித்ததால் சர்ச்சை எழுந்தது. இதனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால், விஷால் அளித்த ‘ஆடியோ’ஆதாரத்தைத் தெடர்ந்து மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். அதன்பின் இரவு 11 மணியளவில் மீண்டும் அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

விஷால் புகார்

இதையடுத்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் நடிகர் விஷால் புகார் மனு அளித்தார். அந்த மனு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலரின் முடிவுதான் இறுதியானது என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியது. இருப்பினும், விஷால் விவகாரத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முதலில் மனுவை நிராகரித்தபோதும், பின்பு ஏற்கப்பட்டதாக தகவல் வெளியானபோதும் சட்டப்படி நடந்து கொள்ளவில்லை. முறையான அறிக்கை அளிக்கவில்லை என்ற புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, வேலுச்சாமியிடம் ராஜேஷ் லக்கானி விசாரணை நடத்தினார். அப்போதே, தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியானது. அதன்பின், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு, சின்னம் ஒதுக்கும் பணியில் சிக்கல் ஏற்படாமல் இருக்க அதிகாரி மாற்றம் தாமதமாகியது. இதற்கிடையே தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி நேற்று மாற்றப்பட்டார். அவருக்கு பதில் பிரவீன் பி.நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பிரவீன் பி.நாயர் தற்போது மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராக உள்ளார். தென்கொரியா சென்றிருந்த அவர், உடனடியாக சென்னை திரும்பி ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

மீண்டும் பிரவீன் பி.நாயர்

கடந்த ஏப்ரலில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது முதலில் தேர்தல் நடத்தும் அலுவலராக பத்மஜா நியமிக்கப்பட்டார். அப்போதுதான் பணப் பட்டுவாடா, விதிமீறல் புகார்கள் அதிகமாக வந்தன. இதையடுத்து, பத்மஜா மாற்றப்பட்டு பிரவீன் பி.நாயர் நியமிக்கப்பட்டார். பணப் பட்டுவாடாவை தடுக்க அவர் நடவடிக்கைகள் எடுத்த நிலையில்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடந்தது. அதன்பிறகு தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை

இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் கண்காணிப்பு பணியில் மெத்தனமாக இருந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவீர்கள் என்று தேர்தல் கண்காணிப்பு குழுக்களுக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிப்பதற்காக 6 பறக்கும் படைகள், 12 நிலை கண்காணிப்பு குழுக்கள், 2 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் என மொத்தம் 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் வாகன சோதனை, புகாரின்பேரில் சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இக்குழுக்கள் கண்காணிப்பு பணியில் மெத்தனமாக இருப்பதாக தேர்தல் பார்வையாளர்கள், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, கண்காணிப்பு குழுக்களுக்கு தேர்தல் பணியில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவுறுத்தும் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாநில தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி பேசியதாவது:

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் அனைத்தையும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கடைநிலை அதிகாரியாக இருந்தாலும், நான் உட்பட எந்த உயர்நிலை அதிகாரியாக இருந்தாலும் தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்களை கடைபிடித்துதான் ஆக வேண்டும். கண்காணிப்பு குழுவில் வாகன சோதனையின்போது சிலர் மெத்தனமாக இருந்ததாக தெரியவருகிறது. அவர்களை தேர்தல் நடத்தும் அலுவலர் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். தேர்தல் பணியில் மெத்தனமாக இருந்தால் யாராக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்யப்படுவீர்கள்.

வாகனங்கள் பறிமுதல்

உள்ளூர் வாகனங்கள் அனைத்துக்கும் பாஸ் வழங்கப்பட உள்ளது. பாஸ் இல்லாமல் வாகனங்கள் ஏதேனும் தொகுதிக்கு உள்ளே நுழைந்தால் அந்த வாகனங்களை கண்காணிப்பு குழுக்கள் பறிமுதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கார்த்திகேயன், வடசென்னை கூடுதல் காவல் ஆணையர் எச்.எம்.ஜெயராம், முன்னாள் தேர்தல் நடத்தும் அலுவலர் கே.வேலுச்சாமி மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x