Last Updated : 27 Dec, 2017 03:09 PM

 

Published : 27 Dec 2017 03:09 PM
Last Updated : 27 Dec 2017 03:09 PM

அதிகரிக்கும் பூச்சிக்கொல்லிகளால் அழியும் தேனீக்கள்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை

பூச்சிக்கொல்லி, களைக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள், ஏனைய பூச்சி வகைகள் அச்சுறுத்தலை சந்தித்து, மெல்ல, மெல்ல அழிவுப்பாதையை நோக்கிச் செல்வதாக ஆய்வுகள் மூலமாக தெரியவந்துள்ளன. பூச்சிக்கொல்லிகளால் அதிகம் பாதிக்கப்படும் பல்வகை தேனீக்களும், வண்ணத்துப்பூச்சிகளுடன், ஹமிங் பறவைகள், வண்டுகள், மற்றும் வெளவால்களும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள், பூச்சிகள் மற்றும் வண்டுகளின் அழிவு, மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் வல்லுநர்கள். திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (34). இவர், கடந்த 15 ஆண்டுகளாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். பல கட்ட போராட்டங்களுக்குப் பின், கடந்த 4 ஆண்டுகளாக தொழில்முறை தேனீ உற்பத்தியாளராக வலம் வருகிறார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

தேனீக்களில் நாட்டுத் தேனீ, சருகு தேனீ, கொம்புத் தேனீ, மலைத் தேனீ, இத்தாலி தேனீ, சிறு தேனீ, கொசுத் தேனீ என பல வகை உள்ளன. தேனீ வளர்ப்பு, பராமரிப்பு குறித்து, தமிழகத்தில் போதிய வழிகாட்டுதல்கள் இல்லை. வட இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான வழிகாட்டு முறைகள் உள்ளன. இணையதளங்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். தொடக்கத்தில் பொருளாதார ரீதியாக இழப்புகள் ஏற்பட்டபோதும், தேனீ வளர்ப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.

25cbnr_honeybee4 பூபதி

தேனீக்களால் ஏற்படும் மகரந்தச் சேர்க்கை மூலமாக, ஆண்டுக்கு 577 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வேளாண் உற்பத்தி கிடைக்கிறது. மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் வண்டுகளும், பூச்சிகளும் இல்லாமல்போனால், வேளாண் உற்பத்தியும் இல்லாமல் போகும். மனிதனுக்கு பல வழிகளில் உதவியாக இருக்கும் இவ்வகையான பூச்சிகளையும், வண்டுகளையும் அழிந்துபோகாமல் பாதுகாக்க வேண்டியது அனைவரின் பொறுப்பு.

களை மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால், அவை அழிவை நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தேனீக்களை பாதுகாக்க வேண்டியது குறித்து, பல்வேறு பகுதிகளில் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

முருங்கை, தும்பைச் செடிகளில் அதிக அளவு தேன் உள்ளது. ஆனால், அவற்றை உறிஞ்ச தேனீக்கள் இல்லை. படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம். ’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x