Published : 18 Dec 2017 09:47 AM
Last Updated : 18 Dec 2017 09:47 AM

உதவி பேராசிரியர் பணிகளுக்கான ‘ஸ்லெட்’ தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவிப்பு

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித்தேர்வுக்கு இன்று (திங்கள்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு மாநில அளவில் நடத்தப்படும் ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வு அல்லது தேசிய அளவில் நடத்தப்படும் ‘நெட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் ஸ்லெட் தேர்வினை கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், 2018-ம் ஆண்டுக்கான ஸ்லெட் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பை அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஸ்லெட் தேர்வானது அடுத்த ஆண்டு மார்ச் 4-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இதற்கு டிசம்பர் 18 அதாவது இன்று (திங்கள்கிழமை) முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை ஆன்லைனில் (www.tnsetexam2018mtwu.in) விண்ணப்பிக்கலாம்.

ஸ்லெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கலை அறிவியல் சம்பந்தப்பட்ட பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) ஆகியோருக்கு 50 சதவீத மதிப்பெண் போதும். (தற்போது ஓபிசி வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது). நெட் தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பாடத்திட்டம் ஸ்லெட் தேர்வுக்கும் பொருந்தும். பாடத்திட்டத்தை யுஜிசி இணையதளத்தில் (www.ugc.ac.in) தெரிந்துகொள்ளலாம்.

தேர்வில் மொத்தம் 3 தாள்கள் இருக்கும், முதல் தாள் அனைவருக்கும் பொதுவானது. இதில் பொது அறிவு, கற்பிக்கும் திறன், ஆராய்ச்சி ஆர்வம் ஆகிய பகுதிகளில் இருந்து 50 கேள்விகள் (100 மார்க்) இடம்பெறும். 2-வது தாளில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து 50 கேள்விகளும் (100 மார்க்), 3-வது தாளிலும் அதே பாடத்தில் இருந்து 75 கேள்விகளும் (150 மார்க்) கேட்கப்படும். அனைத்து வினாக்களுமே அப்ஜெக்டிவ் முறையில் அமைந்திருக்கும்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, விழுப்புரம், காரைக்குடி, வேலூர், ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய 11 மையங்களில் தேர்வு நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தபாலில் அனுப்பப்படாது.

தேர்வுக்கூட அனுமதிசீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஸ்லெட் தேர்வு பாடப்பிரிவுகள், ஆன்லைன் விண்ணப்ப முறை, தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட இதர விவரங்களை அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.motherteresawomenuniv.ac.in) விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x