Published : 12 Jul 2014 12:58 PM
Last Updated : 12 Jul 2014 12:58 PM

மவுலிவாக்கம் விபத்து தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை: ஆளுநரிடம் ஸ்டாலின் மனு

மவுலிவாக்கத்தில் கட்டிட விபத்து தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி திமுக சார்பில் அக்கட்சி பொருளாளர் ஸ்டாலின் ஆளூநர் ரோசைய்யாவிடம் மனு அளித்தார்.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் கடந்த மாதம் 28ம் தேதி இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டிட விபத்து குறித்து விசாரிக்க நீதியரசர் ரெகுபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கும் உத்தர விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்டிட விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) காலை திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் பேரணி நடத்தினர்.

இந்தப் பேரணி எழும்பூர் சிஎம்டிஏ அலுவலகம் அருகில் உள்ள லேங்ஸ் கார்டன் சாலையில் இருந்து புறப்பட்டு, ராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகே நிறைவு பெற்றது.

பின்னர், மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகன், வேலு, துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் 5 பேர் கவர்னர் மாளிகைக்குச் சென்று மனு அளித்தனர்.

மனு விபரம்:

"சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11 மாடி கட்டிடம் குளப்பகுதியில் கட்டப்பட்டிருக்கிறது. கட்டிடம் கட்ட அனுமதி கோரிய போது, கட்டுமான நிறுவனத்தினர் மணல் பரிசோதனை அறிக்கையை சி.எம்.டி.ஏ.விடம் அளிக்கவில்லை. மாறாக, கட்டுமானப் பணிகளை ஆரம்பித்த பிறகு மணல் பரிசோதனை அறிக்கையை அளித்துள்ளனர்.

விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் ஒரு வேளை மக்கள் குடியேறிய பிறகு விபத்து நடந்திருந்தால் பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கும். ஆனால் முதல்வர் ஜெயலலிதாவோ சி.எம்.டி.ஏ விதிமுறை மீறல் எதுவும் இல்லை என கூறுகிறார்.

விபத்துக்குள்ளான கட்டிடத்தை கட்டி வந்த பிரைம் சிருஷ்டி நிறுவனத்திற்கு, கடந்த 2013 ஜூன் 6-ல் தான் அந்த கட்டிடத்தை கட்ட சி.எம்.டி.ஏ அனுமதி கிடைத்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அனுமதி பெறுவதற்கு முன்னரே அந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் துவங்கியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

மவுலிவாக்கம் விபத்து குறித்து விசாரிக்க நீதிபதி ரெகுபதி தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. இருப்பினும், அவர் நடுநிலையாக இந்த விசாரணையை மேற்கொள்வாரா என்ற சந்தேகம் நிலவுகிறது.

மேலும், விபத்துக்குள்ளான கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு தமிழக அமைச்சர்கள் பலர் சென்றதும். கட்டிட அனுமதி வழங்குவதில் பிரைம் சிருஷ்டி நிறுவனருக்கு பல்வேறு சலுகைகள் செய்யப்பட்டிருப்பதும் சந்தேகங்களை எழுப்புகின்றன.

இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என தேமுதிக, பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன.

எனவே, மவுலிவாக்கம் 11 மாடி கட்டிட விபத்து குறித்த விசாரணையை சிபிஐ-க்கு மாற்றுமாறு தமிழக அரசுக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்துகிறேன்" இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டாலின் பேட்டி:

தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய ஆளுநர் உறுதியளித்ததாக தெரிவித்தார். மேலும், அனைத்துக் கட்சியினரையும் ஒருங்கிணைத்து போராடுவது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x