Published : 30 Dec 2017 01:51 PM
Last Updated : 30 Dec 2017 01:51 PM

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 நிர்ணயம் செய்க: வைகோ வேண்டுகோள்

 விவசாயிகளின் நலன் கருதி கட்டுபடியாகக்கூடிய வகையில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 என்று நிர்ணயம் செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழக அரசு நடப்பு 2017-18 ஆம் ஆண்டு பருவத்திற்கு நெல் கொள்முதல் விலையை காலதாமதமாக அறிவித்து இருக்கிறது. ஆண்டுதோறும் சம்பா அறுவடைக்கு முன்பாக உணவுப் பொருள் வழங்கல் துறைச் செயலாளர், ஆணையர், தமிழ்நாடு நுகர்பொருள் வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர், காவிரி டெல்டா ஆட்சியர்கள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்புக் கூட்டத்தை நடத்தி, நெல் கொள்முதல் விலையை அறிவிப்பது வழக்கமாகும்.

ஆனால் தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் நெல்லுக்கான கொள்முதல் விலையை தீர்மானித்துள்ளது. மத்திய அரசு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதில் தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு நெல்லுக்கு ஆதார விலையாக சன்னரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1590, பொது ரகம் குவிண்டாலுக்கு ரூ.1550 என்று நிர்ணயம் செய்தது.

ஆனால் இந்த கொள்முதல் விலை போதுமானதல்ல என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். விவசாய விளைபொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி உற்பத்திச் செலவுடன், மேலும் 50 விழுக்காடு தொகையைச் சேர்த்து கொள்முதல் விலையை தீர்மானிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருவதை மத்திய அரசு அலட்சியப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக மத்திய அரசு நிர்ணயித்த விலையோடு, ஊக்கத்தொகையாக சன்னரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.70-ம், பொது ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.50-ம் கூடுதலாக உயர்த்தி, முறையே ரூ.1660. ரூ.1600 என்று தீர்மானிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தள்ளது. தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு கடும் ஏமாற்றத்தைத் தருகிறது.

இயற்கை இடர்ப்பாடுகள், இடுபொருட்கள் விலை உயர்வு, தாங்க முடியாத கடன் சுமை, விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை, பருவகால மாறுபாடுகளால் மகசூல் குறைவு என்று பல்வேறு சோதனைகளுக்கு இடையில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதில் மத்திய, மாநில அரசுகள் பெரும் துரோகம் இழைப்பது ஏற்புடையதல்ல.

எனவே, விவசாயிகளின் நலன் கருதி கட்டுபடியாகக்கூடிய வகையில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 என்று நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்போது விவசாயிகளிடமிருந்து ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி என எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது.

திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த ஆண்டு நெல் கொள்முதல் செய்தபோது, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை முழுமையாக வழங்காமல், மோசடி செய்ததாக புகார் எழுந்தது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.''

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x