Last Updated : 21 Dec, 2017 11:18 AM

 

Published : 21 Dec 2017 11:18 AM
Last Updated : 21 Dec 2017 11:18 AM

இசையால் இறைவனை தாலாட்டும் சட்டையப்பன்

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தாங்கள் நினைத்தது கைகூட, விதவிதமாக வேண்டுதல் செலுத்துவார்கள்; கோயில்களில் சேவை செய்வார்கள். ஆனால், சீர்காழி சட்டையப்பனின் இறைத் தொண்டு சற்றே வித்தியாசமானது.

உலக நன்மைக்காக

‘சட்டையப்பன் உலக நன்மைக்காக கடந்த ஏழு ஆண்டுகளாக இசையால் இறைவனை குளிர்வித்து வருகிறார்’ என்று சிதம்பரத்தைச் சேர்ந்த பாலமுருகன் ‘தி இந்து - இங்கே.. இவர்கள்.. இப்படி!’ பகுதிக்கான அலைபேசி (044 42890013) எண்ணில் தெரிவித் திருந்தார். 2010-ல், இந்த இறை இசைப் பயணத்தைத் தொடங்கிய சட்டையப்பன், தேவார நால்வரால் பாடல்பெற்ற சிவாலயங்களுக்குச் சென்று இசையால் இறைவனை தாலாட்டி வருகிறார். அப்படி, இதுவரை 88 சிவாலயங்களில் தனது இசைத் தொண்டை செய்து முடித்திருக்கிறார். இப்போதும் இவரும் இவரது குழுவினரும் பவுணர்மி தோறும், எங்காவது ஒரு பாடல்பெற்ற தலத்தில் இறைவன் சந்நிதியில் இசைக் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சட்டையப்பன் வாய்ப்பாட்டு பாட, இவரோடு பணியாற்றும் இசைக் கல்லூரிப் பேராசிரியர்கள் மூவர் மிருதங்கம், வயலின், மோர்சிங் இசைக்க, இரண்டு மணி நேரத்துக்கு தேவார, திருவாசகம், அபிராமி அந்தாதி, தமிழிசை மூவர்களின் பாடல்கள், தியாக ராஜர் பாடல்கள் என இறைவனை மட்டுமின்றி, பக்தர்களையும் மகிழ்விக்கிறது இந்தக் குழு. இதற்கான இசைக் கருவிகள் மைக் செட் உள்ளிட்ட அத்தனை பொருட்களையும் சட்டையப்பனே தனது சொந்த செலவில் வாங்கி வைத்திருக்கிறார்.

மாத ஊதியத்தில்..

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைக் கல்லூரியில் இசைப் பேராசிரியராக பணியாற்றும் சட்டையப்பன் தனது மாத ஊதியத்திலிருந்து இந்த இசைத் தொண்டுக்காக மாதா மாதம் ஏழாயிரம் ரூபாயை செலவு செய்கிறார். இவரது இறை இசைப் பணிக்கு பக்க துணையாய் நிற்கிறார் இவரது மனைவி ஸ்ரீகோகிலாதேவி.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த சட்டையப்பன், பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு சீர்காழியில், நடமாடும் நூலகம் நடத்தி வந்தார். அந்த சமயத்தில் சில நல்ல மனிதர்களின் உதவியுடன் இசை ஆசிரியர் சுந்தர்ராமனிடம் சங்கீதம் படித்தார். அதைத் தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைக் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் வாய்ப் பாட்டுப் படித்தார். பிறகு, ஓராண்டு பட்டயப் படிப்பில் இசை ஆசிரியர் பயிற்சியையும் முடித்த இவர், இசைக் கலைமணி பட்டமும் பெற்றவர்.

sattai_2.JPG சட்டையப்பன் rightகுழந்தைகள் இசை படிக்க வேண்டும்

படித்த கல்லூரியிலேயே இசை ஆசிரியராக பணி செய்யும் வாய்ப்புக் கிடைத்த சட்டையப்பனுக்கு, தான் படித்த இசையாலேயே இறைவனுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம். அதைத் தொடர்ந்தே இந்த இறை இசைப் பயணத்தைத் தொடங்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் நவராத்திரி இசைவிழா இவரது முயற்சியால் நடத்தப்படுகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி திருவாதிரை, ஆனித் திருமஞ்சனம் ஆகிய உற்சவங்களில் தேவாரம் பாடிச் செல்லும் குழுவில் பிரதானமானவர் சட்டையப்பன். இதுதவிர, சீர்காழியிலும் சிதம்பரத்திலும் நூற்றுக் கணக்கான மாணவர்களுக்கு இசையும் கற்றுத் தந்து வருகிறார்.

நம்முடன் மிக இயல்பாக உரையாடிய சட்டையப்பன், “குழந்தைகள் இசை படித்தால் எதிர்கால சமுதாயம் வன்முறையற்ற சமுதாயமாக மலரும். இசையை படித்தவர்களின் மனங்களில் உலகம் அமைதியாக இருக்க வேண்டும் என்கிற எண்ணமே மேலோங்கி நிற்கும். எனது இசைப் பயணத்தில் உலக அமைதிக்காக, தேவார நால்வரால் பாடல்பெற்ற 67 தலங்களுக்கும் சென்று இசைத்தொண்டு நிகழ்த்திட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இறைவனின் ஆசியிருந்தால் அது நிச்சயம் நிறைவேறும்” என்று சொன்னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x