Published : 18 Dec 2017 09:42 AM
Last Updated : 18 Dec 2017 09:42 AM

திருவொற்றியூரில் கன ரக வாகனங்களில் நிலக்கரி எடுத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கன ரக வாகனங்களில் நிலக்கரி எடுத்துச் செல்வதை தடை செய்யவேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு கடந்த 15-ம் தேதி மீஞ்சூரில் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்துடன் தொடங்கியது. மாநாட்டின் 2-வது நாளான நேற்று முன்தினம், நடந்த பிரதிநிதிகள் மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அ.சவுந்தரராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் கட்சியின் வளர்ச்சிக்காக பணியாற்றிய மூத்த தோழர்கள் கதராடை அணிவிக்கப்பட்டும், நினைவு கேடயங்கள் வழங்கப்பட்டும் கவுரவிக்கப்பட்டனர். சமூக அக்கறையுடன் ’அறம்’ திரைப்படத்தை இயக்கிய மீஞ்சூரை சேர்ந்த கோபிநாயரை பாராட்டி சால்வை அணிவித்தும், நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது.

மாநாட்டின் நிறைவு நாளான நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

எண்ணூர் துறைமுகத்திலிருந்து, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படும் நிலக்கரி துகள்களால் மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன. விபத்துகளும் தொடர்கின்றன. ஆகவே, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கன ரக வாகனங்களில் நிலக்கரி எடுத்துச் செல்வதை, தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு திறப்பு விழா காணாத நிலையில், 2015-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சேதமடைந்த திருக்கண்டலம் தடுப்பணையை புதிதாக அமைக்க வேண்டும்.

கொசஸ்தலை, ஆரணி, கூவம் ஆறுகளில் தொடரும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும், மாவட்ட தலைநகரிலிருந்து கிராமப்புறங்களுக்கு போதிய அரசு பஸ்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x