Published : 20 Aug 2023 07:18 PM
Last Updated : 20 Aug 2023 07:18 PM

2024 தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணி வென்றால் தமிழகத்தில் ‘நீட்’ இருக்காது: ஸ்டாலின் உறுதி

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்

சென்னை: “2024 மக்களவைத் தேர்தலில் நாங்கள் பங்கெடுக்கும் ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்றால், நீட் தேர்வு நிச்சயம் தமிழகத்தில் இருக்காது என்ற உறுதியை நான் அளிக்கிறேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மாணவர்களின் மருத்துவக் கல்லூரி கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசைக் கண்டித்தும், அதற்குத் துணைபோகும் ஆணவம் பிடித்த ஆளுநரைக் கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட உண்ணாநிலை அறப்போராட்டம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

காலை தொடங்கி மாலை வரையிலான இப்போராட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக உடன்பிறப்புகள், அணிகளின் செயல்வீரர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் பங்கெடுத்திருப்பதையும் ஊடகங்களின் வாயிலாகப் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

நீட் தேர்வை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையானது அரசியல் கோரிக்கையல்ல; அது கல்விக் கோரிக்கை. அதிலும் குறிப்பாக, சமூகச் சமத்துவக் கல்வியை விரும்பும் அனைவரது கோரிக்கை. நீட் தேர்வை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையானது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியின் கோரிக்கையல்ல; அனைத்து மக்களின் கோரிக்கையாகவும் இன்று மாறி இருக்கிறது.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் எதிர்த்தது நாம் சிலர்தான். ஆனால், இன்று இத்தேர்வின் கொடூரத் தன்மையை அனைவரும் அறிந்து விட்டார்கள். அதனால்தான் கட்சி எல்லைகளைக் கடந்து இத்தேர்வுக்கு எதிரான முழக்கம் நாடு முழுவதும் கிளம்பி வருகிறது. இவர்களது ஆதரவையும் சேர்த்து இப்போராட்டம் வெளிப்படுத்திவிட்டது.

மிக உறுதியாகக் கூறுகிறேன், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பங்கெடுக்கும் ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்றால், நீட் தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது என்ற உறுதியை நான் அளிக்கிறேன். ஒன்றியத்தின் புதிய ஆட்சியில் நீட் தேர்வு நிச்சயம் இருக்காது என்பதை, தேர்தல் வாக்குறுதியாகவே அளிக்க வைப்போம். அந்த வலிமையும் உறுதியும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உண்டு. இப்படி ஒரு வாக்குறுதியை அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவும் தர முடியுமா?

ஏழை - எளிய - விளிம்பு நிலை - நடுத்தர - ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைப்பதுதான் பாஜக.வின் உண்மையான நோக்கம். ஊழலுக்கு எதிரானவர்களைப் போல நடித்துக் கொண்டு, தனியார் பயிற்சி நிறுவனங்கள் கோடிகளில் புரளப் பச்சைக்கொடி காட்டிக் கொண்டிருப்பது ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி. இவர்களது ஊழல் வண்டவாளங்கள்தான் சிஏஜி அறிக்கையில் சிரிப்பாய் சிரிக்கிறதே!

தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொழிக்கவும் - அப்பாவி மக்களை நசுக்கவும் ஒன்றிய பாஜக அரசால் நடத்தப்படும் நீட் தேர்வை அதிமுகவின் அடிமை ஆட்சிக்காலம் ஆரம்பக் காலத்திலேயே எதிர்த்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. பாஜகவின் பாதம்தாங்கிகளான அடிமை அ.தி.மு.க. கூட்டம், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஒன்றிய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட தகவலையே சட்டமன்றத்திற்குச் சொல்லாமல் வாயைப் பொத்திக் கிடந்தது. தங்களது நாற்காலி காப்பாற்றப்பட்டால் போதும் யார் நாசமானால் என்ன என்று நினைத்து தரையில் விழுந்து கிடந்தார்கள்.

அரியலூர் அனிதா தொடங்கி - குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் வரை ஏராளமான மாணவர்களின் உயிரைக் குடித்த நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை எங்களது போராட்டம் ஓயாது. நாடாளுமன்றத்திலும் - சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் போராடிய நாங்கள், அமைய இருக்கும் புதிய ஒன்றிய ஆட்சியின் மூலமாக வலியுறுத்தி நீட் தேர்வை ரத்து செய்ய வைப்போம்.

என்னைப் பொறுத்தவரையில், நான் நம்பிக்கை இழக்கவில்லை. நீட் என்பது ஏதோ மாற்ற முடியாத அரசியலமைப்புச் சட்டமல்ல. அரசியலமைப்புச் சட்டத்தையே காலில் போட்டு மிதித்தவர்கள் ஒன்றிய பாஜகவினர். எனவே, நீட் தேர்வும் ரத்தாகும். அதனை ரத்து செய்ய வலியுறுத்தும் உண்ணாநிலைப் அறப்போராட்டத்தை மிகச் சிறப்பாக நடத்திய இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி, மாணவரணிச் செயலாளர் தம்பி எழிலரசன், மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் ஆகியோருக்கும் இதில் பங்கெடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் போராட்டம் நமக்கு மேலும் உறுதியை ஏற்படுத்தி இருக்கிறது. நீட் தடுப்புச் சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x