Published : 20 Aug 2023 06:33 PM
Last Updated : 20 Aug 2023 06:33 PM

மதுரை அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சித் தமிழர்’ பட்டம்

மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம் வழங்கப்பட்டது.

மதுரை: ‘அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா’ என்ற பெயரில் மதுரையில் நடந்த அதிமுக மாநில மாநாட்டில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு "புரட்சித் தமிழர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.

கே.பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றப்போது, அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி 50 ஆண்டு நிறைவு பெறுவதை தொடர்ந்து அக்கட்சியின் சார்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக மாநில மாநாடு நடந்தது. இதில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் பட்டியலிடப்பட்டது. 2000 சிறிய மருத்துவமனைகள் திறந்தது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தது, பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கியது, 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்தது, வேளாண் மண்டலம் அமைத்தது, குடிமராமத்து திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வந்தது குறித்து விளக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட சர்வ சமய பெரியோர்கள், எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சேவையைப் பாராட்டி, "புரட்சித் தமிழர்" என்ற பட்டத்தை வழங்கினர். புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை கட்டிக் காப்பாற்றுவார் என்று கூறி, "புரட்சித் தமிழர்" பட்டம் மேடையில் வழங்கப்பட்டது. அப்போது மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் கரவொலி எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முன்னதாக, இன்று காலை, அதிமுகவின் வீர வரலாறு பொன்விழா எழுச்சி மாநாடு, மதுரை அருகே வலையங்குளத்தில் கோலாகலமாக தொடங்கியது. மாநாட்டு திடல் முன் அமைக்கப்பட்டிருந்த 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது குவிந்திருந்த தொண்டர்கள் வாழ்த்தி கோஷமிட்டனர். வானில் மூன்று முறை வட்டமிட்ட ஹெலிகாப்டர் மூலம் 1 டன் ரோஜா மலர்கள், அவர் மீதும், தொண்டர்கள் மீது தூவி வரவேற்பு வழங்கப்பட்டது.

அதன்பின் மாநாட்டு பந்தலை, ரிப்பன் வேட்டி திறந்து வைத்ததோடு நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த அதிமுகவின் 51 ஆண்டு வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா, பொதுச்செயலாளர் கே.பழனிசாமி ஆகியோரின் அரசியல் வரலாறு, அதிமுக ஆட்சியின் சாதனைகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x