Published : 20 Aug 2023 03:02 PM
Last Updated : 20 Aug 2023 03:02 PM

பல்லடம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்தில் குளிரூட்டும் பெட்டி பழுதால் அலைக்கழிக்கப்படும் மக்கள்

திருப்பூர்: பல்லடம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்தில் பழுதடைந்துள்ள குளிரூட்டும் பெட்டியை உடனடியாக சீரமைத்து தர வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்புத் தலைவர் ஆ.அண்ணாதுரை கூறியதாவது: விபத்துகளால் உயிரிழந்தவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்களின்உடல்கள், பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கடந்த 6 மாதங்களாக பிரேத பரிசோதனைக் கூடத்தில் சடலங்களை பாதுகாக்கும் குளிரூட்டும் பெட்டி பழுதடைந்திருப்பதால் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சடலங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதனால், பிரேத பரிசோதனைக்கு பிறகு சடலங்களை வழக்கப்படி அடக்கம் செய்யவோ அல்லது எரியூட்டவோ மீண்டும் பல்லடம் பகுதிக்கு எடுத்து வர உறவினர்களுக்கு இரட்டிப்பு செலவாகிறது. பிரேத பரிசோதனைகூடத்தில் உள்ள குளிரூட்டும் பெட்டி சீரமைக்கப்படாததால், சடலங்கள் பல்லடத்துக்கும், திருப்பூருக்கும் அலைக்கழிக்கப்படுகின்றன.

பல்லடத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல லட்சம் செலவு செய்து பல்லடம் அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்கித் தந்தாலும், அவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பல்லடம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக் கூடத்தில் குளிரூட்டும் பெட்டியைஉடனடியாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பல்லடம் அரசு மருத்துவமனை பணியாளர்கள் கூறியதாவது: ஒரே நேரத்தில் 6 சடலங்கள்வைக்கக்கூடிய குளிரூட்டப்பட்ட பெட்டி பழுதாகி 4 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இங்கு பகல் நேரத்தில் சடலங்கள் வந்தால், பிரேத பரிசோதனை செய்து உடனடியாக அனுப்பிவைக்கப்படும். மாலை 4 மணிக்கு மேல் வரும் சடலங்கள் அனைத்தும், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப் படுகின்றன. இங்கு வைத்து மறுநாள் பிரேத பரிசோதனை செய்தால் சடலங்கள் அழுகத் தொடங்கிவிடும்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறையில் போதிய ஆள் வசதி இல்லை. பல் நோக்கு பணியாளரே பிரேதபரிசோதனையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது, என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x