Published : 19 Jul 2014 10:01 AM
Last Updated : 19 Jul 2014 10:01 AM

குடியரசுத் தலைவர் வருகை எதிரொலி: என்ஐடி வளாகத்திலிருந்து நாய்கள் வெளியேற்றம் - விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் புகார்

திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழக வெள்ளி விழாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வருகை தரவுள்ளதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த வளாகத்தில் இருந்த நாய்களை சட்டவிரோதமாகப் பிடித்து வெளியேற்றி உள்ளதாக ஸ்கேன் பவுண்டேஷன் புகார் தெரிவித்துள்ளது.

திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழக (என்ஐடி) பொன்விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை (ஜூலை 19) திருச்சி வருகிறார். இதையொட்டி அந்த வளாகத் திலேயே ஹெலிகாப்டர் இறங்கு தளம், சாலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் தீவிரப் படுத்தியுள்ளனர்.

பலநூறு ஏக்கரில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிந்தன. குடியரசுத் தலைவர் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நாய்களைப் பிடித்து கொணலை என்ற இடத்தில் விட்டுவிட்டதாக என்ஐடி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்கேன் பவுண்டேசன் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டத்துக்குப் புறம்பாக நாய்களை அப்புறப் படுத்தியதைக் கண்டித்தும், இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஸ்கேன் பவுண்டேசன் அமைப்பின் தலைமை செயல் அலுவலர் ஜெரால்டு துவாக்குடி காவல் நிலையத்தில் ஜூலை 8-ம் தேதி புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஜெரால்டு `தி இந்து’விடம் கூறும்போது, `என்ஐடி வளாகத்தில் திரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களை அப்புறப்படுத்துவதற்காக அவற்றை பிடித்து வேறிடத்தில் கொண்டு சென்று விட்டுள்ளனர். மேலும் 39 நாய்களை பிடித்து மினி லாரியில் ஏற்றி வேறிடத்தில் கொண்டு சென்று விடுவதற்காக தயாராக வைத்திருந்தபோது எங்களுக்கு தகவல் கிடைத்தது. நாங்கள் தலையிட்டதன் பேரில், மினி லாரியில் ஏற்பட்ட நாய்கள் அதே வளாகத்திலேயே திரும்ப விடப்பட்டுள்ளன.

விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் 11 (டி) (i) பிரிவு மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 428 மற்றும் 429 ஆகியவற்றின்கீழ் இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஒரு மனிதனை கொலை செய்தால் அளிக்கப்படும் தண்ட னையைத்தான் நாயை கொலை செய்தாலும் அளிக்க வேண்டும் என சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக என்ஐடி இயக்குநர் சுந்தர்ராஜன், குடியரசுத் தலைவர் ஆகியோருக்குக் கடிதங்கள் அனுப்பியுள்ளோம். நாங்கள் அனுப்பியுள்ள புகாருக்கு காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்’ என்றார்.

குடியரசுத் தலைவர் வருகைக்காக என்ஐடி வளாகத்தில் திரிந்த நாய்களைப் பிடித்து, கொடுமைகள் செய்து வெளியேற்றிய செய்தி திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x