Published : 17 Aug 2023 04:17 PM
Last Updated : 17 Aug 2023 04:17 PM

மகனை கண்டுபிடித்து தரக் கோரி 86 வயது மூதாட்டி புகார்: வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்த துணை ஆணையர்

மூதாட்டிக்கு உணவு ஊட்டிவிடும் திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய்

சென்னை: மகனை கண்டுபிடித்து தரக்கோரி 86 வயது மூதாட்டி அளித்த புகாரின் பேரில், மூதாட்டியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரிடம் விசாரணை நடத்திய காவல் துறை துணை ஆணையர், விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

மூதாட்டி புகார்: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடைபெற்றது. ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பொதுமக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது வயதான மூதாட்டி ஒருவர் காவல் ஆணையாிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். ஆணையர் மூதாட்டியின் வயதை கேட்டபோது, தனக்கு 86 வயது எனவும், எனது பெயர் அனுசுயா, தனது கணவரை இழந்துவிட்ட நிலையில், தான் திருவல்லிக்கேணி, வெங்கட்ரங்கம் தெருவில் உள்ள வாடகை வீட்டில் தனது மகனுடன் வசித்து வந்த நிலையில், 2013-ம் ஆண்டு தனது மகன் சத்யநாராயணன் என்பவர் வீட்டிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு மும்பை சென்றுவிட்டார்.

காவல் ஆணையர் உறுதி: இதனால் கடந்த 10 ஆண்டுகளாக தான் மேற்படி வீட்டில் தனியாக வசித்துக் கொண்டு அவதிப்பட்டு வருவதாகவும், தனது மகனை கண்டுபிடித்து, சென்னைக்கு வரவழைத்து வயதான தன்னை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும்படி அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். உடனே காவல் ஆணையர், மூதாட்டியிடம் நீங்கள் கவலைப்படாமல் வீட்டுக்கு செல்லுங்கள், காவல் துணை ஆணையர் உங்களை நேரில் வந்து பார்த்து உங்கள் குறைகளை கேட்டு தீர்த்து வைப்பார் என ஆறுதல் கூறி, காவல் வாகனத்தில் மூதாட்டியை அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். அதன்பேரில் மூதாட்டி அனுசுயா, காவல் வாகனத்தில் காவலர் உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டு பத்திரமாக வீட்டில் சேர்க்கப்பட்டார்.

துணை ஆணையர் விசாரணை: ஆணையர், உத்தரவின் பேரில், திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய், திருவல்லிக்கேணி உதவி ஆணையர் எம்.எஸ்.பாஸ்கர், காவல் ஆய்வாளர், பெண் உதவி ஆய்வாளர் ஆகியோருடன் வியாழக்கிழமை (ஆக.17) காலை, அண்ணாசதுக்கம் (D-6) காவல் நிலைய எல்லையில் உள்ள மூதாட்டி அனுசுயாவின் வீட்டுக்கு நேரில் சென்று மூதாட்டிக்கு பழக்கூடைகள் வழங்கி, ஆறுதலாக பேசி, குறைகளை கேட்டறிந்தார்.

வீடு பார்த்து... - விசாரணையில், மூதாட்டி அனுசுயாவுக்கு 3 மகன்கள் உள்ள நிலையில், 2 மகன்கள் எங்குள்ளனர் என தெரியவில்லை. சத்யநாராயணன் என்ற மகன் மட்டும் அனுசுயாவுடன் வசித்து வந்த நிலையில், 2013ம் ஆண்டு வீட்டிலிருந்த பணம் ரூ.10,000-ஐ எடுத்துக் கொண்டு மும்பை சென்று அங்கு வசித்து வருவதாகவும், தான் மட்டும் கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வருவதாகவும், தான் சைவ உணவுகள் மட்டும் சாப்பிடும் வழக்கம் உள்ளதாகவும், தானே சமைத்து சைவ உணவு சாப்பிட்டு வருவதாகவும், அருகில் வசிக்கும் நபர்கள் அசைவ உணவு சாப்பிட்டு வருவதால், தனக்கு வேறு இடத்தில் வீடு பார்த்து கொடுக்கும்படியும், தனது மகனை தன்னுடன் சேர்த்து வைத்து தன்னை கவனித்துக் கொள்ள அறிவுரைகள் வழங்கும்படியும் கூறினார்.

ஒரு மாதத்துக்குள்... உடனே, துணை ஆணையர் நிச்சயமாக ஒரு மாதத்துக்குள் உங்களுக்கு சைவ உணவு சாப்பிடும் நபர்கள் வசிக்கும் பகுதியில் வாடகைக்கு வீடு பார்த்து கொடுப்பதாகவும், அதற்குள் தங்களது மகனை கண்டுபிடித்து தங்களுடன் சேர்த்து வைப்பதாகவும் உறுதி அளித்தார். மேலும், முதியோர் காப்பகத்தில் சேர்த்து தங்களை கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்கிறேன் என கேட்டதற்கு மூதாட்டி முதியோர் இல்லத்தில் தங்குவதற்கு விருப்பம் இல்லை என தெரிவித்து, தன் வீட்டிலேயே வசித்து தானே சமைத்து சாப்பிட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

மும்பையில்... - மேலும் மூதாட்டியின் மகன் சத்யநாராயணனுக்கு தற்போது 60 வயதுக்கு மேல் உள்ளது என்பதும், மும்பையில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை செய்து வருவதும் தெரியவந்ததால், மும்பையில் உள்ள சத்யநாராயணனை கண்டுபிடிக்கவும், அவரது செல்போன் எண்ணை கண்டறிந்து பேசவும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

பட்டா புத்தகம்: மேலும், மூதாட்டி தற்போது வசிக்கும் வீட்டில் மூத்த குடிமக்களை கண்காணிக்கும் பட்டா புத்தகம் வைக்கப்பட்டு தினசரி ரோந்து காவலர்கள் மூதாட்டியின் வீட்டிக்கு நேரில் சென்று குறைகள் கேட்டறிந்து உதவிகள் செய்யவும், மூதாட்டியின் செல்போன் எண்ணை பெற்று தினசரி அவருடன் பேசி குறைகள் இருந்தால் தெரிவிக்கவும் உதவி ஆணையருக்கு உத்தரவிட்டார். மேலும், அவசர உதவி தேவைப்பட்டால் காவல் துறையினரை அழைக்க, காவல்துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளரின் பெயர் மற்றும் செல்போன் எண்களை எழுதிக் கொடுத்து அவசர உதவி தேவைப்படுமபோது, அழைக்க காவல துணை ஆணையர், மூதாட்டியிடம் அறிவுறுத்தினார்.

காவல் அதிகாரிகளை வீட்டுக்கே அனுப்பி தமது குறைகளை கேட்டறிந்து, விரைந்து நடவடிக்கை எடுத்தற்காக காவல் ஆணையருக்கு மூதாட்டி அனுசுயா நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x