Published : 17 Aug 2023 11:50 AM
Last Updated : 17 Aug 2023 11:50 AM

நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை என்பதால் தென்னை விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று கோரி விடுதலை நாளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களின் போது நூற்றுக்கணக்கான இடங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தென்னை விவசாயிகளின் இந்தக் கோரிக்கை மிகவும் நியாயமானது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை. அதனால், தென்னை விவசாயம் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இந்த நிலையை மாற்றவும், தேங்காய்க்கு நியாயமான விலை கிடைக்கவும் நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகின்றனர். அந்தக் குரல் தான் இப்போது கிராமசபை தீர்மானமாக எதிரொலித்திருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 10.98 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 500 கோடிக்கும் கூடுதலான தேங்காய்கள் விளைகின்றன. கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு தேங்காய்கள் வருவதால், அதற்கு போதிய விலை கிடைப்பதில்லை. இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்குவது தான். அதன் மூலம் தேங்காய்க்கான தேவை அதிகரித்து விலையும் உயரும். நியாயவிலைக் கடைகளில் மலிவு விலையில் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட்டால் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 6 மாவட்டங்களில் மட்டும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதால் எதிர்பார்த்த பயன் கிடைக்காது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் கூடுதலான குடும்பங்களுக்கும் மாதத்திற்கு குறைந்தது ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட்டால் தான் தென்னை விவசாயிகளுக்கு ஓரளவாவது பயன்கிடைக்கும். எனவே, மத்திய அரசுடன் தமிழக அரசும் இணைந்து, தமிழகத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மாதம் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x