Published : 17 Aug 2023 05:59 AM
Last Updated : 17 Aug 2023 05:59 AM

கடல் அலையில் சிக்கி 3 சிறுவர்கள் மரணம் - முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே நவ்வலடி கிராமத்தில் கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரை கிராமமான நவ்வலடியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் முகேஷ் (13), இசக்கியப்பன் மகன் ராகுல் (12) , வள்ளிமுத்து மகன் ஆகாஸ் (13) மற்றும் பிரகாஷ் ஆகிய 4 பேரும் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலையில் இவர்கள் கடலில் குளிக்கச் சென்றனர்.

எதிர்பாராதவிதமாக 4 பேரும் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். அதில் பிரகாஷ் மட்டும் தத்தளித்து கரைக்கு வந்து சேர்ந்தான். மற்ற மூவரும் கடலில் மூழ்கி மாயமானார்கள். தப்பிவந்த பிரகாஷ் ஊருக்குள் வந்து விவரத்தை கூறியதும், அப்பகுதி மீனவர்கள் கடலில் 3 மாணவர்களையும் தேடினர். உவரி போலீஸார், தீயணைப்பு படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இப்பணி இரவிலும் நீடித்தது.

சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு இரவோடு இரவாக அங்குவந்து தேடும் பணியை துரிதப்படுத்தினார். இரவு முழுக்க தேடும் பணி நடைபெற்றது. நேற்று அதிகாலையில் 3 மாணவர்களின் சடலங்கள் கோடாவிளை அருகே கரை ஒதுங்கின. இச்சம்பவத்தால் நவ்வலடி கிராமமே சோகத்தில் மூழ்கியது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை உள்ளிட்டோர் 3 மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

வீடியோ வைரல்: இதனிடையே கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள் ஏற்கெனவே வெளியிட்டிருந்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. அதில், ‘மச்சான் நான் சாகப் போறேன்டா’ என்று ஒருவர் சொல்கிறார். ‘நானும் வரேன்டா மச்சான்’ என மற்றொரு சிறுவன் சொல்லிவிட்டு தனது நண்பனின் தோளில் கை போட்டுக்கொண்டு செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் விளையாட்டுத்தனமாக பதிவிட்ட வீடியோ, துயரச் சம்பவமாக மாறியுள்ளது.

தலா ரூ.2 லட்சம்: இதற்கிடையே, உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். நிவாரணத் தொகையை சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று மாலை வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x