Published : 18 Dec 2017 09:28 PM
Last Updated : 18 Dec 2017 09:28 PM

பாஜகவின் செல்வாக்கு மோடியின் சொந்த மண்ணிலேயே சரியத் தொடங்கிவிட்டது: திருமாவளவன்

குஜராத் தேர்தல் முடிவில் வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரையில் பாஜகவின் செல்வாக்கு மோடியின் சொந்த மண்ணிலேயே சரியத் தொடங்கிவிட்டதையே புலப்படுத்துகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''குஜராத் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸிடமிருந்து பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதை வகுப்புவாத சக்திகள் கொண்டாடி மகிழ்கின்றன. குஜராத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருந்த போதிலும் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவே ஏற்பட்டிருக்கிறது நூறு இடங்களைக் கூட அதனால் பெற முடியவில்லை. அதற்கு மாறாக காங்கிரஸ் கட்சி ராகுல்காந்தி தலைமையில் அங்கே புத்தெழுச்சி பெற்றிருப்பதைக் காண முடிகிறது. எனினும் குஜராத் தேர்தல் முடிவை நாம் அலட்சியப்படுத்திவிட முடியாது. இந்தியா முழுவதும் உள்ள மதச் சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதைத் தான் அது வலியுறுத்துகிறது. இனியும் தாமதிக்காமல் மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று திரள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

வளர்ச்சி முன்னேற்றம் என்ற முழக்கத்தை முன்வைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்த பாஜக குஜராத் மாநில தேர்தலில் மீண்டும் வகுப்புவாதத்தை கையிலெடுத்தது. தான் வெற்றி பெறுவதற்காக பாஜக எதையும் செய்யத் தயங்காது என்பதேயே இது காட்டுகிறது.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வகுப்புவாத நடவடிக்கையின் மூலம் மக்களை பிளவுபடுத்துவதற்கு பாஜக தீவிரமாக முயற்சிக்கும் என்பதற்கான அடையாளமே இந்தத் தேர்தல். இந்நிலையில் மதச் சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து காங்கிரஸ் தலைமை அதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

பாஜகவுக்கு மிகப் பெரிய வெற்றி ஒன்றும் கிடைத்துவிடவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் வாங்கிய வாக்குகளைவிட பத்து சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் குறைந்துள்ளன. பாஜகவின் செல்வாக்கு மோடியின் சொந்த மண்ணிலேயே சரியத் தொடங்கிவிட்டதையே இது புலப்படுத்துகிறது. 2019 பொதுத்தேர்தலில் பாஜக அடையப்போகும் தோல்விக்கு குஜராத்தில் அது சந்தித்துள்ள பின்னடைவு ஒரு துவக்கம் என்றே கூறவேண்டும்.

குஜராத் தேர்தலில் போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர் என்பதைக் காட்டுகிறது. இது வரவேற்கத்தக்க மாற்றமாகும்.

குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்திருக்கும் இடங்கள் ராகுல்காந்தியின் தலைமை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிகையை காட்டுகின்றன. அவருக்கு எமது வாழ்த்துகள்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x