Published : 16 Aug 2023 04:00 AM
Last Updated : 16 Aug 2023 04:00 AM

கோவை, திருப்பூர், நீலகிரி கிராம சபைக் கூட்டங்கள் - கோரிக்கையை ஏற்க அதிகாரிகள் மறுத்ததால் மசினகுடியில் புறக்கணிப்பு

கோவை / பொள்ளாச்சி / திருப்பூர் / உதகை: கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், கோரிக்கையை ஏற்க அதிகாரிகள் மறுத்ததால் மசினகுடி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனர்.

77-வது சுதந்திர தினத்தையொட்டி, கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியம் பட்டணம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. சிறப்பு பார்வையாளராக பங்கேற்று ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பேசும் போது,‘‘சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டின் விடுதலைக்கு மட்டுமின்றி மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டனர். மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டன. தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செப்டம்பர் முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் இரண்டு கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க முடியாதவர்கள் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கப்படாமல் விடுபட்டவர்களுக்காக ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய தேதிகளில் முகாம்கள் நடத்தப்படும்’’என்றார். தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், இணைய வழி மனைப் பிரிவு, கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பு பயன்படுத்துவது உள்ளிட்ட 14 கூட்டப் பொருட்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க, பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நேற்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தென்னை விவசாயிகளின் நலன் கருதி நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கானாகுளம் பகுதியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் மக்களுக்கு, ஓராண்டுக்கு மேலாகியும் ஆற்று குடிநீர் வருவதில்லை. மயானத்தில் குடிநீர், பாதை, மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவில்லை.

ஒரே வீட்டில் 2 குடும்பத்தினருக்கு மேல் வசித்து வரும் நிலையில், கூடுதலாக பட்டாவழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வாயில் கருப்பு துணி கட்டி கூட்டத்தில் பங்கேற்றனர். வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, ஆட்சியரிடம் மனு அளிக்க வைப்பதாக உறுதி அளித்தனர்.

காங்கயம் அருகே பழையகோட்டைபுதூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், பழையகோட்டை புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம்உயர்த்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மக்கள் சார்பில் ரூ.1 லட்சம் பங்களிப்புத் தொகையும் அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதத்தை, பள்ளியில் படிக்கும் மாணவிகள் பழையகோட்டை கிராம ஊராட்சித் தலைவரிடம் நேற்று வழங்கினர்.

அவிநாசி அருகே நடுவச்சேரி ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் பங்கேற்று, 16 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லட்சுமணன், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் வரலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் மட்டும் கூட்டம் நடைபெறவில்லை என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி ஊராட்சி மன்றம் சார்பில், ஊராட்சிமன்ற தலைவர் மாதேவி தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு அரசு துறை அதிகாரிகள் மற்றும் மசினகுடியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.

கூட்டம் தொடங்கியவுடன், மசினகுடி பகுதியிலுள்ள கிராம பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்யவிடாமல் வனத்துறையினர் தடுத்து வருவதால் சாலை, குடிநீர் தொட்டி, பாதை உள்ளிட்டவை சீரமைக்க முடியாத நிலையும், அடிப்படை வசதிகள் செய்ய முடியாமலும், விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய சிங்காரா வனத்துறையினர் தடை விதித்து வருவதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர். எனவே, மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டுமென கோரினர்.

மேலும், பழங்குடியின மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்யவிடாமல் தடுக்கும் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர், வெளி மண்டல துணை கள இயக்குநர் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரிய தீர்மானத்தைஅதிகாரிகள் ஏற்க மறுத்ததால், கிராமசபைக் கூட்டத்தை அனைவரும் புறக்கணித்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x