Published : 11 Nov 2017 09:49 AM
Last Updated : 11 Nov 2017 09:49 AM

திருச்சியில் நிதி நிறுவன பணியாளரிடம் ரூ.95 லட்சம் வழிப்பறி செய்த சென்னையை சேர்ந்த 3 இளைஞர்கள் கைது

திருச்சியில் நிதி நிறுவன பணியாளரிடம் ரூ.95 லட்சத்தை வழிப்பறி செய்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த 3 இளைஞர்களை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் அருளானந்தம் நகரைச் சேர்ந்தவர் சாமிநாதன் (53). தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர், கடந்த செப்டம்பர் 5-ம் தேதி அதிகாலை ரூ.95 லட்சம் பணத்துடன் சென்னையிலிருந்து திருச்சிக்கு பேருந்தில் வந்தார். திருச்சி ரயில்வே ஜங்சன் அருகே உள்ள டீக்கடையில் பணப்பையை கீழே வைத்துவிட்டு, செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்குவந்த ஒரு இளைஞர், ரூ.95 லட்சத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார். அப்போது, அதே சாலையில், 2 இளைஞர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் தயாராக நின்று கொண்டிருந்தனர். அவர்களது வாகனத்தில் ஏறி பணப்பையுடன் அந்த இளைஞர் தப்பிவிட்டார். இதுதொடர்பாக, சாமிநாதன் அளித்த புகாரின்பேரில் கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய, மாநகர காவல் ஆணையர் ஏ.அருண் உத்தரவின்பேரில், கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு உதவி ஆணையர் சிவசங்கர், இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு, சப் இன்ஸ்பெக்டர் உமாசங்கரி உள்ளிட்டோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இத்தனிப்படையினர், இளைஞர்கள் தப்பிச்சென்ற வழித்தடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அவர்கள், சென்னை பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் சென்னை சென்று விசாரித்தனர்.

அப்போது, வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் சென்னை கொடுங்கையூர் லட்சுமி அம்மன் நகர் முதல் தெருவைச் சேர்ந்த முகமது ரபீக் மகன் ஜகுபர் சாதிக் (28), சென்னை அய்யப்பன்தாங்கல் சின்னக்குளத்தான் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் ராஜா (எ) தியாகராஜன்(24), சென்னை சேத்துப்பட்டு பூபதிநகரைச் சேர்ந்த பெருமாள் மகன் அஞ்சான் (எ) மணிகண்டன் (25) ஆகியோர் என்பதும், இவர்கள் சென்னை பர்மா பஜாரில் புரோக்கராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து இவர்கள் மூவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.76.03 லட்சம், வழிப்பறிக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், 1 லேப்டாப், 1 டாப்லெட், 5 செல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x