Published : 14 Aug 2023 06:00 AM
Last Updated : 14 Aug 2023 06:00 AM

77-வது சுதந்திர தினத்தையொட்டி ஜார்ஜ் கோட்டையில் நாளை தேசிய கொடியேற்றுகிறார் முதல்வர்

சென்னை: இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நாளை (ஆக. 15) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றிவைத்து உரையாற்றுகிறார்.

மேலும், கல்பனா சாவ்லா, அப்துல் கலாம் பெயரிலான விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதல்வர் வழங்குகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3-வது ஆண்டாக தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றுகிறார்.

இதை முன்னிட்டு, தலைமைச் செயலகக் கட்டிடம், கோட்டை கொத்தளம் பகுதிகள் வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டுள்ளன. 119 அடி உயர கொடிமரமும் தற்போது ரூ.45 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது.

நாளை கோட்டை கொத்தளத்துக்கு வரும் முன் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் முதல்வர், காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றுகிறார். பின்னர், குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குகிறார்.

தொடர்ந்து, வீரதீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, அப்துல் கலாம் விருது, முதல்வரின் காவல் பதக்கம், முதல்வரின் இளைஞர் விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகள் வழங்கப்படுகிறன்றன. இதுதவிர, தகைசால் தமிழர் விருது இந்த ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு முதல்வரால் வழங்கப்படுகிறது.

தொடர்ந்து, முதல்வர் சுதந்திர தின உரையாற்றுகிறார். விழாவையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்றுடன் 3 முறை சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று, பாதுகாப்புப் பணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, அஸ்ரா கார்க், கபில்குமார் சி.சரத்கர் மேற்பார்வையில் சென்னை முழுவதும் 9 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிகையாக, அனைத்து விமான நிலையங்களுக்கும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரைப் பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர இடங்களில் கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள், வாகன சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதேபோல, டிஜிபி சங்கர் ஜிவால் நேரடி மேற்பார்வையில், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால், உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடல் பகுதி வழியாக பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவலைத் தடுக்க, கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார், விசைப்படகுகளில் ரோந்து செல்கின்றனர். கடலோர மாவட்ட மீனவர்களிடம் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x