Published : 14 Aug 2023 05:52 AM
Last Updated : 14 Aug 2023 05:52 AM

சாதிவாரி கணக்கெடுப்பு தகவலை வெளியிட மத்திய அரசுக்கு பயம்: தோடர் பழங்குடியினரிடையே ராகுல்காந்தி கலந்துரையாடல்

கோவை: சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த தகவலை வெளியிட மத்திய அரசுக்கு பயம் என, நீலகிரியில் பழங்குடியினருடன் கலந்துரையாடலின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

சமூகத்தின் வெவ்வேறு பிரிவினரை தொடர்ச்சியாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. சந்தித்து கலந்துரையாடி வருகிறார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு பேருந்தில் பயணம் செய்த ராகுல்காந்தி, கல்லூரி மாணவர்கள், பெண்களிடம் உரையாடி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி உணவு விநியோகம் செய்வோரின் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்று அவர்கள் அன்றாடம் படும் கஷ்டங்களை அறிந்து கொண்டார். கடந்த மே மாதம் டெல்லியில் இருந்து சண்டிஹருக்கு லாரியில் பயணம் செய்து, லாரி ஓட்டுநர்கள் சந்தித்துவரும் சிக்கல்களை கேட்டறிந்தார்.

டெல்லியில் கடந்த ஜூன் மாதம் பைக் மெக்கானிக்குகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து, ஜூலை மாதம் ஹரியாணாவில் விவசாயிகளின் விளைநிலங்களுக்கு சென்று, பெண் விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நட்டு, அவர்களுடன் கலந்துரையாடினார்.

நடனமாடி மகிழ்ச்சி: இந்நிலையில், நீலகிரியில் தோடர் பழங்குடியின மக்கள் வசிக்கும் முத்தநாடு மந்துக்கு நேற்று முன்தினம் சென்ற ராகுல்காந்தி, அங்குள்ள பழமைவாய்ந்த மூன்போ, அடையாள் ஓவ் ஆகிய கோயில்களை பார்வையிட்டார். தோடரின மக்களுடன்சேர்ந்து நடனமாடி மகிழ்ந்ததோடு, அவர்கள் அளித்த இயற்கை உணவை சாப்பிட்டார். அப்போது, அகில இந்திய காங்கிரஸ் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியும் உடன் இருந்தார்.

தோடர் பழங்குடியினர் உடனான சந்திப்பின்போது, ராகுல்காந்தி பேசியது குறித்து பிரவீன் சக்கரவர்த்தி கூறியதாவது:

சந்திப்பின்போது தோடர் பழங்குடியின மாணவி ஒருவர், ‘‘மருத்துவ படிப்பில் சேருவதற்காக எங்களை நீட் தேர்வை எழுத சொல்கின்றனர். இங்கே போதிய வசதி, வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறோம். எங்கு சென்று பயிற்சி பெற்று நாங்கள் இந்த தேர்வெழுத முடியும்? எங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் போதிய இடஒதுக்கீடு இல்லை. அவ்வாறு இட ஒதுக்கீடு இல்லாமல் நாங்கள் எப்படி முன்னேறுவோம்?’’ என்றார்.

அதற்கு ராகுல்காந்தி, ‘‘சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் என நாடு முழுவதும் எஸ்.டி. மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். உங்களுக்கும் அந்த பிரச்சினை உள்ளது. இதற்காககத்தான் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தகவலை மத்திய பாஜக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். புதிதாக கணக்கெடுப்பை நடத்துமாறும் கோரிக்கை வைத்து வருகிறேன். கணக்கெடுப்பு குறித்த தகவலை வெளியிட்டால், அது விவாத பொருளாகும் என்ற பயத்தால் மத்திய அரசு தகவலை வெளியிடாமல் உள்ளது” என்றார். இவ்வாறு பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x