Published : 18 Nov 2017 10:13 AM
Last Updated : 18 Nov 2017 10:13 AM

பேரறிவாளன் விவகாரத்தில் நீதிமன்றம்தான் முடிவெடுக்க முடியும்: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து

பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆதம்பாக்கத்தில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் இந்துஜா என்ற இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் தீக்காயம் அடைந்த இந்துஜாவின் தாயார், சகோதரி ஆகியோர் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று காலை அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆதம்பாக்கம் சம்பவத்தில் தீக்காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும். அவர்களின் சிகிச்சை செலவுகள் முழுவதையும் தமிழக அரசே ஏற்க வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு கருணை காட்ட வேண்டும் என இந்த வழக்கில் தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும்.

அரசு அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் ஆய்வுக் கூட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கவே பாஜக அரசு இதுபோல நடந்து கொள்கிறது. ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவு செய்வோம். ஆளுநரின் ஆய்வை வரவேற்கும் அமைச்சர்கள் விரைவில் வீட்டுக்குச் செல்லும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x