Published : 11 Nov 2017 09:54 AM
Last Updated : 11 Nov 2017 09:54 AM

ஜெயலலிதா மருத்துவ அறிக்கையை சரிபார்க்க அரசு மருத்துவர்கள் குழு அமைக்க விசாரணை ஆணையம் உத்தரவு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த மருத்துவ அறிக்கையை சரிபார்க்க அரசு மருத்துவர்கள் குழுவை அமைக்க விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து அவரது உடல்நிலை மோசமானது.

டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைந்தார். அவரது மரணம் குறித்து நீதி விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கலச மகால் கட்டிடத்தில் விசாரணை ஆணையத்துக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 22-ம் தேதி

ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் சொல்ல விரும்புவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் கொடுத்து விசாரணையில் ஆஜராகலாம் என்றும், நவம்பர் 22-ம் தேதிக்குள் இது தொடர்பான பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்துவிடவேண்டும் என்றும் விசாரணை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதையொட்டி 50-க்கும் மேற்பட்டவர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாக பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் விசாரணையைத் தொடங்குவதற்கு ஏதுவாக முதற்கட்டமாக 15 நபர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அனுபவம் மிக்க மருத்துவர்கள்

ஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும் அது தொடர்பான மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்வதற்கும் உயர்மட்ட மருத்துவர்கள் குழுவை விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.

இதில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அனுபவம் மிக்க மருத்துவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை ஆராய்ந்து தேவையான தகவல்களை விசாரணை ஆணையத்துக்கு வழங்குவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x