Published : 11 Aug 2023 02:27 PM
Last Updated : 11 Aug 2023 02:27 PM

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகள்: முதல்வர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்

ரூ.14.90 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் ரூ.14.90 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள் செய்திக் குறிப்பு:தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.11) சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில்14 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத போக்குவரத்துச் சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருவதோடு, அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் பேருந்து பயண வசதியை ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையை அளித்து வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை, சாதாரண நகர கட்டண பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்காக “மகளிர் கட்டணமில்லா பயணம்” திட்டம், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், புதிய பேருந்துகளை கொள்முதல் செய்தல், பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

தமிழக முதல்வர் 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருவதாகவும், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் (Chassis) நல்ல நிலையில் உள்ள 1000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்டி, பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலும், அரசுப் போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையிலும், அடிச்சட்டம் நல்ல நிலையிலுள்ள 1000 பழைய பேருந்துகளை 152.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் முதற்கட்டமாக, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 61 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 15 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 37 பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 32 பேருந்துகளும், என மொத்தம் 100 பேருந்துகள் 41 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தமிழக முதல்வர் இன்றைய தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x