Last Updated : 30 Nov, 2017 02:58 PM

 

Published : 30 Nov 2017 02:58 PM
Last Updated : 30 Nov 2017 02:58 PM

கட்-அவுட், பேனர்களை அகற்றக்கோரி கோவையில் சமூக ஆர்வலர்கள் போராட்டம்

கோவையில் உள்ள சாலைகளில் வைக்கப்பட்டுள்ள கட் அவுட்டுகளை அகற்ற வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக கோவை அவிநாசி சாலையில் வ.உ.சி. மைதானம் அருகே உள்ள அண்ணா சிலையில் சாலையை ஆக்கிரமித்து கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 அடி உயரமுள்ள இந்த கட்-அவுட் சட்ட விதிகளுக்குப் புறம்பாக வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அவிநாசி நெடுஞ்சாலையில் வழிநெடுக சுமார் 13 கி.மீ. தூரத்துக்கு சாலையிலேயே குழிதோண்டி கட்-அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

''சாலைகளில் வைக்கப்படும் கட்-அவுட்டுகளை உடனடியாக அகற்றவேண்டும்; ஏற்கெனவே அலங்கார வளைவால் விபத்து நடந்தபிறகும் பிரம்மாண்ட கட்-அவுட் வைப்பது கண்டிக்கத்தக்கது'' என்றுகூறி தன்னார்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

'கனமழையிலும் போராட்டம்'

அங்கே பெய்துவரும் கன மழைக்கு இடையிலும் போராட்டம் தொடர்ந்தது. அரை மணி நேரம் கழித்து அங்கே மாநகர எல்லைக்குட்பட்ட ரேஸ்கோர்ஸ் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் வந்தனர்.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட12 சமூக ஆர்வலர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும் சிறிது நேரத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். போலீஸாருடன் சென்ற தன்னார்வலர்கள், இனியும் கட்-அவுட்டுகளை அகற்றவில்லை எனில், வெளியே வந்தபிறகு தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துச் சென்றனர்.

நீதிமன்ற உத்தரவு

முன்னதாக இன்று (வியாழக்கிழமை) கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும் எனவும் அனுமதி இருந்தாலும் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், சாலை வளைவில், பள்ளிகளுக்கு அருகில், போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x