Published : 24 Nov 2017 09:19 PM
Last Updated : 24 Nov 2017 09:19 PM

ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆர்.கே.நகரில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. போஸ்டர்கள், சுவர் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. தேர்தல் விதிமீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது.

நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் இன்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையம் நவ.24 அன்று அறிவித்துள்ளபடி, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு வருகின்ற டிச.21 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அறிவிப்பினை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக மேற்கண்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் சில இடங்களில் மாவட்டம் முழுமைக்கும் அமலுக்கு வருகிறது.

ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குநர் கே.வேலுச்சாமியும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக தண்டையார்பேட்டை வட்டாட்சியர் முருகேசன் மற்றும் தண்டையார்பேட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சுப்ரமணியனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பதிவு அலுவலராக சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டல அலுவலர் விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகம் மேற்படி தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகத்தில் செயல்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் அரசியல் கட்சியினரோ அல்லது பொதுமக்களோ சுவர் விளம்பரங்கள் செய்யக் கூடாது எனவும், சுவரொட்டிகள் ஏதும் ஒட்டவேண்டாம் எனவும், அவ்வாறு ஏதேனும் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அதனை உடனடியாக அகற்றுமாறும் கோரப்படுகிறது. அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டுள்ள விளம்பரங்களை சம்பந்தப்பட்ட நபர்கள் அகற்றவில்லையெனில், அவை பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்படும்.

விதிமீறல் மேற்கொண்ட நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு, இந்த தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்திட ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வி.அன்புச்செல்வன், சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையாளர் ஜெயராம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x