Published : 11 Aug 2023 01:23 AM
Last Updated : 11 Aug 2023 01:23 AM

"நில ஆர்ஜிதம் செய்யாத இடத்தில் பிரதமர் எப்படி அடிக்கல் நாட்டினார்?" - நிர்மலா சீதாராமனுக்கு மா.சுப்பிரமணியன் கேள்வி

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்துக்கு எதிராக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

அதில், "நிதித்துறை அமைச்சர் என்ற பெரிய பொறுப்பில் இருப்பவர் ஒரு உண்மைக்கு மாறான செய்திகளை சொல்லி மக்களை குழப்புவது என்பது தவறானது. எய்ம்ஸ் மருத்துவமனை இன்றைக்கு காலதாமதம் ஆவதற்கு காரணம் மாநில அரசு இடத்தை கையகப்படுத்தி தராதது என்கின்ற வகையில் ஒரு செய்தியை கூறுகிறார். அதோடு மட்டுமல்லாமல் ரூ.1200 கோடியில் திட்டமிடப்பட்டது ரூ.1900 கோடியாக உயர்ந்து இருக்கிறது என்கின்ற தகவலையும் சொல்லி இதற்கெல்லாம் தமிழ்நாடு அரசு காலதாமதம் செய்ததுதான் காரணம் என்று தவறான கருத்தை கூறியிருந்தார்.

2015ம் ஆண்டு ஒன்றிய அரசின் சார்பில் 7 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை வரும் என்று அறிவிக்கப்பட்டது. உத்திரப்பிரதேசத்தின் கோரக்பூர், அசாமின் கவுகாத்தி, ஜம்முவில் ஒரு மருத்துவமனை, இமாச்சலப்பிரதேசத்தின் பிலாப்பூர், பீகார், காஷ்மீரில் உள்ள அவந்திபூரா, மதுரை தோப்பூரில் ஒரு மருத்துவமனை என்று 7 மருத்துவமனைகள் அப்போது அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட இந்த 7 மருத்துவமனைகளும் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டவைகள் என்றாலும் இப்போது கோரக்பூர் மருத்துவமனையை பொறுத்தவரை முழுமையாகவே இயங்க தொடங்கியிருக்கிறது.

இதே 2015ல் அறிவிக்கப்பட்ட மருத்துவமனை தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது அசாம், கவுகாத்தியில் அறிவிக்கப்பட்ட மருத்துவமனை தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டது, மருத்துவமனை கட்டிடம் மட்டும் இன்னும் தொடங்கப்படவில்லை. ஜம்முவில் அறிவிக்கப்பட்ட மருத்துவமனையிலும் மருத்துவக் கல்வி வகுப்புகள் தொடங்கியிருக்கிறது, மருத்துவமனை மட்டும் இன்னும் தொடங்கப்படவில்லை. இமாச்சலபிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் அறிவிக்கப்பட்ட மருத்துவமனை முழுமையாக பயன்பாட்டில் இருந்துக் கொண்டிருக்கிறது. பீகாரில் தர்மாந்தா என்கின்ற இடத்தில் அறிவிக்கப்பட்ட மருத்துவமனை பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

காஷ்மீரில் உள்ள அவந்திபூரா என்கின்ற இடத்தில் தொடங்கப்பட்ட மருத்துவமனையும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மதுரை உங்களுக்கு தெரியும், அடுத்து 2017ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு மருத்துவமனையை அறிவித்தார்கள், அது இப்போது முழு பயன்பாட்டில் இருந்துக் கொண்டிருக்கிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஒரு மருத்துவமனையை அறிவித்தார்கள், அதில் வகுப்புகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தெலுங்கானாவில் ஒரு மருத்துவமனையை அறிவித்தார்கள், அது தற்போது முழு பயன்பாட்டில் இருந்துக் கொண்டிருக்கிறது.

இதன்பிறகு 2019ல் அரியானாவில் மதுரா என்கின்ற இடத்தில் ஒரு மருத்துவமனையை அறிவித்தார்கள். அந்த பணிகள் நடைபெற்று வருகிறது. 2015ல் 7ம், 2017ல் 3ம், 2019ல் 1ம் அறிவிக்கப்பட்டு ஒரு சில மருத்துவமனைகள் பயன்பாட்டில் இருக்கிறது. ஒரு சில மருத்துவமனைகளில் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, ஒரு சில மருத்துவமனைகயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2022ல் மணிப்பூர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த ஆண்டு 2 மருத்துவமனைகளை அறிவித்திருக்கிறார்கள். அந்த 2 மருத்துவமனைகளுக்கு இடங்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் 2015ல் மதுரை தோப்பூரில் 7 மருத்துவமனைகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனைக்கு பிரதமர் ஜனவரி 27, 2019 அன்று அடிக்கல் நாட்டினார். ஆனால் தற்போது எந்தவிதமான கட்டுமானப் பணிகளும் நடைபெறாமல் உள்ளது. இன்றைக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு அரசு நில ஆர்ஜிதம் செய்து தரப்படாததால் மருத்துவமனை கட்டுவதில் காலதாமதம் ஏற்படுகிறது என்கிறார்.

அவர் முன் வைக்கின்ற கேள்வி என்னவெனில் 2019 ஜனவரி 27ல் அதாவது 4 ஆண்டுகளுக்கு முன்னால் நில ஆர்ஜிதம் செய்யப்படாத ஒரு இடத்தில் பிரதமர் எப்படி வந்து அடிக்கல் நாட்ட முடியும். அரசாங்கத்துக்கு சொந்தமில்லாத ஒரு இடத்தில் அடிக்கல் நாட்டி சென்றிருக்கிறிர்கள் என்றால் இது யாரை ஏமாற்ற, நில ஆர்ஜிதமே செய்யப்படாத ஒரு இடத்தில் பிரதமரே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டி சென்றிருப்பது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காகவா, இது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து.

ஏனெனில் இந்த இடம் 222.47 ஏக்கர் அரசாங்கத்துக்கு சொந்தமான இடம். இது ஆர்ஜிதம் செய்யப்படவேண்டிய அவசியம் இல்லை. இந்த இடத்தை நில மாற்றம் செய்து தரப்படவேண்டும், ஒன்றிய அரசுக்கு இதனை மாற்றம் செய்து தரவேண்டும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான முந்தைய அரசு இந்த இடத்தை முழுமையாக நிலமாற்றம் செய்து ஒன்றிய அரசுக்கு தந்திருக்கிறார்கள். இதன்பின்னரே பிரதமர் வந்து அடிக்கல் நாட்டினார்.

அதன்பிறகு 2020 பிப்ரவரி 4, 5ம் தேதிகளில் JICA அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் அந்த இடத்தை ஆய்வு செய்கிறார்கள். ஆய்வு செய்து விட்டு அந்த 222.47 ஏக்கர் நிலத்துக்கும் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். சுற்றுச் சுவர் கட்டுவதற்கு ஒன்றிய அரசு ரூ.15 கோடி ஒதுக்குகிறது. அந்தச் சுற்றுச்சுவர் கட்டும்பணி 2021 ஜனவரியிலேயே முடிவுற்றது. திமுக அரசு பொறுப்பேற்றது என்பது 2021 மே 7ம் தேதி, 2021 ஜனவரியில் சுற்றுச் சுவர் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு விட்டது.

மற்ற மாநிலங்களில் 100% எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் அனைத்தும் ஒன்றிய அரசின் நிதி ஆதாரத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதில் எந்த இடத்துக்கும் மாநில அரசின் நிதி ஆதாரம் இல்லை, மாநில அரசின் பங்களிப்பு என்பது நிலத்தை ஒதுக்கீடு செய்வது மட்டும்தான், ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் மாநில அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்த பின்னரும், ஒன்றிய அரசு நிதி ஆதாரத்தை தராமல் JIC விடம் கடன் வாங்க அறிவுறுத்துகிறது.

மற்ற மாநிலங்களில் ஒன்றிய அரசின் நிதி ஆதாரத்தில் கட்டிடங்கள் கட்டப்படுகிறபோது, தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றிய அரசு நிதி தராமல் பாரபட்சம் காட்டப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இந்த பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, கேள்வியும் எழுப்பவில்லை.

இதற்கு மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த விளக்கத்தில், முதலில் 600 படுக்கைகளுடன் கட்ட திட்டமிடப்பட்டு தற்போது 900 படுக்கைகளாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்து, இது ஒரு சாதனையாக சொல்லுகிறார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் 1 ½ ஆண்டுகளில் 1000 படுக்கைகளுடன், ரூ.376 கோடி மதிப்பீட்டில், சென்னை, கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை கட்டி திறந்து வைத்துள்ளார்கள்.

ஆனால் ஒன்றிய அரசு 4 ஆண்டுகளுக்கு முன்னாள் அடிக்கல் நாட்டி ரூ.1200 கோடியில் திட்டமிடப்பட்டது, தற்போது 1900 கோடியாக உயர்ந்துள்ளது என்று பெருமையுடன் கூறிவருகிறது. நாங்கள் ஜப்பானில் உள்ள JICA விடன் இதுகுறித்து கேட்டபோது, 2024ம் ஆண்டு இறுதியில் தான், கட்டிடத்தின் வடிவம் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்த புள்ளி கோரப்படும் 2028 ஆம் ஆண்டு தான் இந்த கட்டிடங்கள் முழுமையாக கட்டப்படும் என்று கூறியுள்ளது.

மற்ற மாநிலங்களுக்கு காட்டும் அக்கறையை தமிழ்நாட்டின் மீதும் காட்டி, மற்றவர்கள் மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்காமல், ஒன்றிய அரசே முழு நிதியையும் தந்து, இந்த மருத்துவமனையை கட்ட தொடங்கினால் 2 ஆண்டுக்குள் கட்டி முடிக்கலாம் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக்கொள்கிறோம். ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை அமைச்சரை சந்திக்கும்போதெல்லாம், எய்ம்ஸ் மருத்துவமனையின் பணியினை விரைவு செய்ய கோரியதன் விளைவாகத்தான், கடந்த 2 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் 50 மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், மருத்தவக் கல்வி பயில்வதற்கு அனுமதியினை தந்திருக்கிறார்கள்.

ஆனால் அப்போதுகூட மதுரையில் இருக்கின்ற தனியார் கல்லூரி, கலைக்கல்லூரி, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் கல்லூரியில் இந்த 50 மாணவர்கள் சேர்க்கை செய்திட கோரினார்கள். ஆனால் தமிழக முதல்வர் இதற்கு ஒத்துக்கொள்ளாவில்லை. தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில், எய்ம்ஸ் மாணவர்களை சேர்க்க அறிவுறுத்தியன் விளைவாகதான், தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் தமிழ்நாட்டில் அமைவதை உறுதி செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, 2020ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதியே எடப்பாடி அரசு, ஆர்ஜிதம் செய்யப்பட்ட இடத்தினை ஒன்றிய அரசிடம் ஒப்படைப்பது தொடர்பான ஆவணத்தை கொடுத்துள்ளார். ஆனால் ஒன்றிய நிதித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான இடத்தை ஒப்படைக்கவில்லை என்று கூறுவது மிகவும் வருத்தத்திற்குரியது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x