Last Updated : 25 Nov, 2017 04:29 PM

 

Published : 25 Nov 2017 04:29 PM
Last Updated : 25 Nov 2017 04:29 PM

மென் பொறியாளர் உயிரைப்பறித்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவு: அமெரிக்காவிலிருந்து திருமணத்துக்கு சொந்த ஊர் வந்தபோது சோகம்

அமெரிக்காவில் பணியாற்றும் மென்பொறியாளர் தனது திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்தவர், சாலை விபத்தில் சிக்கினார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை சின்னியம்பாளையம் ஆர்ஜி புதூரை சேர்ந்தவர் ரகு (32). அமெரிக்காவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ரகுவுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதற்காக பெண் பார்ப்பதற்காக சமீபத்தில் ரகு அமெரிக்காவிலிருந்து சொந்த ஊரான கோவைக்கு வந்தார்.

நேற்று இரவு பழனி செல்வதற்காக, வீட்டிலிருந்து சிங்காநல்லூர் பேருந்து நிலையத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அவினாசி சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி அருகே எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவுக்காக சவுக்கு கட்டைகள் அமைக்கப்பட்ட வளைவு இருந்தது. அந்த இடத்தில் விளக்கு வசதி இல்லாததாலும், சாலையில் அலங்கார வளைவு உள்ளது என்ற எந்த எச்சரிக்கையும் இல்லாததாலும் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ரகு அலங்கார வளைவுக்காக அமைக்கப்பட்ட சவுக்கு தடுப்புகள் மீது மோதினார்.

இதில் தூக்கி வீசப்பட்ட ரகு சாலையில் விழுந்தார், அப்போது பின்னால் வந்த வாகனம் ரகுவின் தலைமீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே ரகு பலியானார். இந்த விபத்து குறித்து கோவை மாநகர போக்குவரத்து (கிழக்கு) காவல்துறை விசாரித்து வருகிறது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அவினாசி சாலையில் அத்துமீறி அலங்கார வளைவுகள் அமைத்து வருவது விபத்துகளை ஏற்படுத்துவதாக கடந்த சில நாட்களாக புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விஜய் கார்த்திகேயன், ''விழாவுக்காக அமைக்கப்பட்ட கட்டமைப்புகளுக்கு மாநகராட்சி அனுமதி வழங்கவில்லை. விபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவுகளை ஓரிரு மணி நேரங்களில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.

சாலையில் அபாயகரமாக வைக்கப்பட்ட அலங்கார வளைவு ஒரு இளைஞரின் உயிரைப் பறிக்கக் காரணமாகியுள்ளது கோவை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x