Published : 09 Aug 2023 02:02 PM
Last Updated : 09 Aug 2023 02:02 PM

அரசு வழங்கிய பட்டா நிலத்துக்கு சொந்தம் கொண்டாடும் வக்பு வாரியம்: 40 ஆண்டுகளாக வசிக்கும் ஈரோடு கிராமத்தினர் அதிர்ச்சி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் கொமரபாளையம் ஊராட்சியில் அங்கணகவுண்டன் புதூர் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பெரும்பள்ளம் ஓடையோரம் குடியிருந்த அருந்ததியர் இன மக்களுக்கு 1980-ம் ஆண்டு அதே பகுதியில் மாற்றிடம் ஒதுக்கப்பட்டது.

மூன்றரை ஏக்கர் அளவிலான இந்த நிலத்தில் 73 குடும்பத்தினர் வீடு கட்டிக்கொள்ள தலா 3 சென்ட் வீதம் பிரித்து ஆதிதிராவிடர் நலத்துறை பட்டா வழங்கியுள்ளது. இந்த இடத்தில் வீடு கட்டி, 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் நிலையில், இந்த நிலம் வக்பு வாரியத்துக்குச் சொந்தமானது எனக் கூறி, பட்டா மாற்றம், பத்திரப்பதிவு போன்றவை மறுக்கப்படுவதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இது குறித்து அங்கணகவுண்டன் புதூரைச் சேர்ந்த பாண்டியன் கூறியதாவது: பெரும்பள்ளம் ஓடையின் கரையில் குடியிருந்து வந்த எங்களுக்கு வெள்ளப்பெருக்கால் பாதிப்பு ஏற்பட்ட போது, இந்த இடம் ஒதுக்கப்பட்டது. அப்போதைய ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் கையொப்பமிட்ட அரசின் பட்டா வழங்கப்பட்டது.

இதைக் கொண்டு, கோபி கூட்டுறவு சங்கத்தில் தலா ரூ.2,500 கடன் பெற்றும், ஊராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு நாங்கள் வீடுகளைக் கட்டி, பெரியார் நகர் என பெயரிட்டு 40 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். எங்கள் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் பெயரில் வீட்டு வரியும் செலுத்தி வருகிறோம். இந்நிலையில், குடியிருப்புவாசி ஒருவர் இறந்த நிலையில், அவரது மகன் தன் பெயருக்கு நிலத்தின் பட்டாவை மாற்றச் சென்றபோது, பத்திரப்பதிவுத்துறையில் பத்திரத்தை பெற்று வருமாறு கூறினர்.

கோபி ஆர்டிஓவிடம் மனு அளிக்கும் அங்கணகவுண்டன் புதூர் கிராம மக்கள்

நாங்கள் சத்தியமங்கலம் பத்திரப் பதிவுத்துறையில் விண்ணப்பித்த போது, ‘நீங்கள் குடியிருக்கும் வீடு அமைந்துள்ள நிலம் வக்பு வாரியத்துக்குச் சொந்தமானது. எனவே, அவர்களிடம் இருந்து தடையின்மை சான்று பெற்று வந்தால் மட்டுமே, பட்டா மாறுதல் செய்ய முடியும்’ என்று தெரிவித்தனர்.

கடந்த 40 ஆண்டுகளாக குடி யிருந்து வரும் வீட்டின் நிலம் வக்பு வாரியத்துக்குச் சொந்தம் என திடீரென இப்போது சொல்கின்றனர். பத்திரப் பதிவுத்துறையின் இந்த அறிவிப்பால், நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அங்கணகவுண்டன் புதூர் பெரியார் நகரில் குடியிருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள், அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். 100 நாள் வேலைத் திட்டம், விவசாயக் கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்துபவர்கள். தாங்கள் குடியிருக்கும் வீடு தங்களுக்கு சொந்தமில்லை என்ற தகவல் இவர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகளில் தொடங்கி கோபி ஆர்டிஓ வரை பல்வேறு கட்டங்களில் மனுக்களை அளித்துள்ளனர் இப்பகுதி மக்கள். கடந்த 6 மாதத்துக்கு மேலாக இந்த முயற்சியில் ஈடுபட்டும், பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைக் கூறி தட்டிக்கழிப்பதால் அடுத்ததாக யாரிடம் செல்வது என்று புரியாமல் தவிக்கின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறும் போது, ‘பத்திரப் பதிவுத் துறையின் இந்த நடவடிக்கையால், வீட்டை விற்பனை செய்தல், பட்டா மாற்றம் செய்தல், வங்கியில் கடன் பெறுதல் போன்றவற்றை செய்ய முடியவில்லை. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் பணிக்கு கடன் பெற முடியாமல், பல வீடுகளின் பணிகள் பாதியில் நிற்கிறது.

எங்கள் நிலத்திற்கு சொந்தம் கொண்டாடும், வக்பு வாரியம் எங்கிருக்கிறது, யாரிடம் தடையின்மை சான்று கேட்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்களுக்குத் தெரிந்த வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அரசு வழங்கிய பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் பலமுறை மனு அளித்து விட்டோம். அரசு வழங்கிய இலவச பட்டா போலியா என்ற சந்தேகம் வருகிறது. எனவே, எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை மீட்டு, அரசே எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்றனர்.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ‘வக்பு வாரிய நிலம் தொடர்பாக மாவட்டம் முழுவதும் பிரச்சினை உள்ளது. வக்பு வாரியம் அளித்த பொதுவான ஒரு கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு பத்திரப்பதிவுத்துறை இவ்வாறு செயல்படுகிறது. எங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் வக்பு வாரியத்துக்குச் சொந்தமான நிலங்கள் குறித்த ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. எனவே படிப்படியாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x