Published : 01 Nov 2017 09:45 AM
Last Updated : 01 Nov 2017 09:45 AM

குடிமராமத்து பணிகள் திட்டம் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்

தமிழகத்தில் அணைகள், ஏரிகள், நீர்வரத்து கால்வாய்கள் ஆகியவற்றில் விவசாயிகளின் ஒத்துழைப்புடன் தூர்வாரும் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம், விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வர் பழனிசாமி தலைமையில் சேலம் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ரோஹிணி கூட்டத்துக்கு முன்னிலை வகித்தார். சேலம் மாவட்டத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவ, மாணவிகள் வாரம் ஒருமுறை தங்கள் குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ரத்த அணுக்களின் அளவீட்டை கணக்கிட்டு காய்ச்சலுக்கான காரணத்தை 40 விநாடிகளில் கண்டறியக் கூடிய உயர்தர நவீன இயந்திரங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் நீர் நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணி திட்டம் விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதமான திட்டமாகும். தென்மேற்கு பருவமழையால் ஏரி, குளங்கள் நிரம்பியதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயர குடிமராமத்து திட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

அதிக மழை இருக்கும்

தற்பொழுது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழைக் காலம் அதிகளவு மழை தரக்கூடியதாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்தால்தான் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியும். பெய்கின்ற மழைநீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்தி விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x