Published : 06 Nov 2017 12:39 PM
Last Updated : 06 Nov 2017 12:39 PM

திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிப்பு முயற்சி முறியடிப்பு

வாரந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில், திங்கட்கிழமைகளில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். இந்த நாளில், கலெக்டரே மக்களிடம் இருந்து புகார் மனுக்களை நேரடியாகப் பெறுவது வழக்கம்.

இன்று 6-ம் தேதி திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த இடமே பரபரப்பானது. அந்த வளாகத்தில் மனுக்களைக் கொடுக்க வந்த இரண்டு பேர், வெவ்வேறு புகார்களுக்காக, தீக்குளிக்க முயன்றனர்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் நல்லாத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். வயது 65. இவரின் அண்ணன் அண்ணாதுரை. தன் தந்தையின் சொத்துகள் முழுவதையும் அண்ணன் அண்ணாதுரை அபகரித்து விட்டார் என்று போலீசிலும் நில அபகரிப்பு வழக்கு மையத்திலும் பல முறை புகார் அளீத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கலெக்டருக்கு மனு அளிக்கும் நாளான இன்று வந்தவர், திடீரென்று கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிப்பு முயற்சியில் இறங்கினார். இதனால் அங்கிருந்தவர்கள் பதட்டமானார்கள். தெற்குச் சரக போலீஸார் ஓடிவந்து, ஜெயராஜை தீக்குளிப்பு முயற்சியில் இருந்து தடுத்து நிறுத்தினார்கள். பிறகு அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர்.

இதேபோல், இன்னொரு தீக்குளிப்புச் சம்பவமும் நடந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா. வயது 42. இவர் முதல் கணவரை விட்டுவிட்டு, அடுத்ததாக ஒருவரை திருமணம் செய்து, வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது. தற்போது 2வது கணவரும் அவரை விட்டுச் சென்றுவிட்டார். எனவே குழந்தைகளை வளர்க்கவும் படிக்க வைக்கவும் கஷ்டப்படுவதாகவும் இரண்டாவது கணவரிடம் சேர்த்து வையுங்கள், அல்லது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு கணவரிடம் இருந்து ஏதேனும் வாங்கிக் கொடுத்து, எங்களை வாழ வையுங்கள் என்று பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த ஜெயா, விரக்தி அடைந்த நிலையில், திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனே தெற்குச் சரக போலீசார், ஜெயாவைக் காப்பாற்றி, தற்கொலை முயற்சியைத் தடுத்தனர். பிறகு அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கந்துவட்டிக் கொடுமையால், நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட கொடூரத்தை அடுத்து, வாராவாரம் கலெக்டர் அலுவலத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம், பரபரப்பாகவும் பதட்டமாகவுமே காணப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x