Published : 11 Jul 2014 10:00 AM
Last Updated : 11 Jul 2014 10:00 AM

மவுலிவாக்க கட்டிட விபத்து - சிபிஐ விசாரிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்தப் பிரச்சினை தொடர்பாக பேச அனுமதிக்கவில்லை என்று கூறி, திமுக, தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சட்டசபையில் இருந்து வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தன. அவைக்கு வெளியே அந்தக் கட்சிகளின் தலைவர்கள் கூறியதாவது:

மு.க.ஸ்டாலின் (திமுக): மவுலிவாக்கத்தில் நடந்த கட்டிட விபத்தில் 61 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து 11 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் நடக்காத மிகப்பெரிய துயர சம்பவம் குறித்து சட்டசபை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு முழுமையாக விவாதிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் அனுமதி கேட்டோம். அவர் அனுமதிக்க வில்லை. அமைச்சர் வைத்திலிங்கம் தெம்பும், திராணியும் இருந்தால் என் பதிலை கேளுங்கள் என சவால் விடுக்கிறார்.

இந்த விபத்து குறித்து முதல்வர் ஜெயலலிதா பேட்டி அளித்தபோது, சிஎம்டிஏ எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். எனவே, அவர் அமைத்துள்ள விசாரணை கமிஷன், சிறப்பு புலனாய்வுக் குழு அனைத் துமே வெறும் கண்துடைப்பு. உண்மையை அறிய சிபிஐ விசாரணை தேவை.

சந்திரகுமார் (தேமுதிக): இந்த விபத்துக்கு பொறுப்பேற்று அமைச்சர் வைத்திலிங்கம் ராஜினாமா செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் விபத்து நடந்த இடத்தைக்கூட நேரில் சென்று பார்க்கவில்லை. கட்டிட முறைகேட்டில் அதிகாரி களுக்கும் அமைச்சர்களுக்கும் மறைமுகமாக தொடர்பு இருப்பதாக சந்தேகப் படுகிறோம். அவர்களை காப்பாற்றவே அவசர அவசரமாக ஒரு நபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. அந்த விசாரணையை நம்ப நாங்கள் தயாராக இல்லை. எனவே, சிபிஐ விசாரணை வேண்டும்.

சவுந்திரராஜன் (மார்க்சிஸ்ட்): எல்லா விதிமுறைகளும் மீறப்பட்டு அங்கு கட்டிடம் கட்ட சிஎம்டிஏ அனுமதி அளித்துள்ளது. இந்தக் கட்டிட விபத்து குறித்து விவாதிக்க அனுமதி அளிக்காததால் வெளிநடப்பு செய்தோம். சிஎம்டிஏ அனுமதி வழங்கியதில் எந்த முறைகேடும் இல்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். இப்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனும், சிறப்பு புலனாய்வுக் குழுவும் போதாது. இது சரியாகவும் இருக்காது. எனவே, மத்திய அரசின் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்): ஓய்வுபெற்ற நீதிபதி ரெகுபதி மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், இந்த விபத்து குறித்து அவர் விசாரிப்பது சரியல்ல. எனவே, ரெகுபதியை மாற்றிவிட்டு, வேறொரு நீதிபதியை நியமித்து உண்மையாக விசாரணை நடத்த வேண்டும்.

பிரின்ஸ் (காங்கிரஸ்): மவுலிவாக்கம் கட்டிட விபத்து பற்றி விசாரிக்க தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ரெகுபதியை நியமித்துள்ளது ஒரு கண்துடைப்பாக இருக்கிறது. பேரவை விதி 66-ன்படி, பேரவைத் தலைவர் விரும்பினால் எந்த பொருள் குறித்தும் பேச அனுமதி அளிக்கலாம். இப்படியொரு பெரிய விபத்து பற்றி பேச அனுமதி அளிப்பதில் தவறில்லை. சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் அல்லது 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்க வேண்டும்.

ஜவாஹிருல்லா (மமக): மவுலிவாக்கம் கட்டிடம் அனுமதி அளித்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள் ளன. தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழு போதாது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x