Published : 03 Nov 2017 08:59 AM
Last Updated : 03 Nov 2017 08:59 AM

நாவலை விட சிறுகதை எழுவதுவது கடினம்: எழுத்தாளர் பெருமாள் முருகன் கருத்து

நாவல் எழுதுவதைவிட சிறுகதைகளை எழுதுவது கடிமானது என எழுத்தாளர் பெருமாள் முருகன் தெரிவித்தார்.

‘தி இந்து - லிட் ஃபார் லைஃப்' சார்பில் எழுத்தாளர் பெருமாள் முருகன் தமிழில் எழுதிய 10 சிறுகதைகளின், ஆங்கில மொழிபெயர்ப்பின் தொகுப்பான ‘தி கோட் தீஃப்’ (The goat thief) புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

விழாவில் கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா புத்தகத்தை வெளியிட்டார். பின்னர், அந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண் ராமன், டி.எம்.கிருஷ்ணா ஆகியோர்பெருமாள் முருகனோடு கலந்துரையாடினர்.

அப்போது, பெருமாள் முருகன் பேசியதாவது: என்னு டைய சிறுகதை தொகுப்புஆங்கிலத்தில் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை வெளியிடும் ஜஃக்கர்நட் பதிப்பகத்துக்கும், இவ்விழாவை ஏற்பாடு செய்த ‘தி இந்து’ குழுமத்துக்கும் எனது நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன். நான் எழுதிய 80 சிறுகதைகளில் இருந்து வாசகர்களுக்கும், எனக்கும் மனநிறை வைத் தரும் 10 சிறுகதைகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

எனது எழுத்துகள் காட்டும் உலகத்தை அறிந்தவர் என்பதால் கல்யாண்ராமன் எனது சிறுகதைகளை சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். நாவல், கட்டுரை, கவிதை என பல வடிவங்களில் நான் எழுதி வருகிறேன். எனவே, சிறுகதைகள் குறைவாகத்தான் எழுதியுள்ளேன் என்று நான் நினைத்தது உண்டு. நாவல் எழுதும்போது சுதந்திரமாக எழுதும் அளவுக்கு இடம் கிடைக்கும். ஆனால், சிறுகதை அப்படியல்ல. அதற்கென ஒரு கட்டுக்கோப் பான வடிவம் உண்டு. அதற்கு உட்பட்டு நடப்பது என்பது கடிமானது.

தொடக்க காலத்தில் சொந்த அனுபவங்களை வைத்து கதை எழுதுவது எளிமையாக இருக்கும். ஆனால், தொடர்ந்து கதை எழுத மனப்பயிற்சியும், எழுத்துப் பயிற்சியும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

டி.எம்.கிருஷ்ணா பேசும்போது, “தி கோட் தீஃப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கதையையும் படிக்க தொடங்கினால், முழுமையாக படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது என்ற அளவுக்கு சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளது” என்றார்.

இவ்விழாவில் ‘தி இந்து' குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான ராஜீவ் லோச்சன், ‘தி இந்து’ குழுமத்தின் இயக்குநர் நிர்மலா லஷ்மணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x