Published : 16 Nov 2017 04:02 PM
Last Updated : 16 Nov 2017 04:02 PM

மின்சார மீட்டர் கொள்முதல் முறைகேடு: மின்துறை அமைச்சர் சொந்த நலனுக்காக பாடுபடுகிறாரா?- ஸ்டாலின் சந்தேகம்

மின்சார மீட்டர் வாங்குவதிலும் அதிக விலை கொடுப்பதன் மூலம் மின்துறை அமைச்சர் தமிழக நலனுக்காக செயல்படுகிறாரா அல்லது தன் சொந்த நலனுக்காக பாடுபடுகிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மின்சார மீட்டர் கொள்முதல் செய்வதில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு 29 லட்சத்து 88 ஆயிரம் எலெக்ட்ரானிக் மீட்டர்கள் கொள்முதல் செய்வதில் நடைபெற்றுள்ள முறைகேடு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மின்சார மீட்டர்களை வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு, 25.3.2017 அன்று பிரிக்கப்பட்ட அந்த டெண்டரில் ஏராளமான விதிமுறை மீறல்கள் நடைபெற்றுள்ளது.

ஒருமுனை மின்சாரப் பயன்பாட்டினை அளவீடு செய்வதற்காக கொள்முதல் செய்யப்படும் இந்த மீட்டரை வழங்குவதற்கான இந்த டெண்டரில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 'கேபிட்டல் பவர் ஸிஸ்டம்ஸ்' என்ற நிறுவனம் கலந்து கொண்டுள்ளது. 13 நிறுவனங்கள் பங்கேற்ற அந்த டெண்டரில் ஒரு மீட்டரை 453 ரூபாய்க்கு வழங்குவதற்கு தயார் என்று இந்த நிறுவனம் கூறியிருக்கிறது. ஆனால், இந்த குறைந்தபட்ச விலையை நிராகரித்த தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், 495 ரூபாய்க்கு மின்சார மீட்டரை வழங்க முன்வந்த 'ஹெச்.பி.எல்' என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது.

குறைந்த விலைக்கு மீட்டர் கொடுக்க முன்வந்த கம்பெனி, இந்தக் குற்றச்சாட்டினை சென்னை உயர் நீதிமன்றத்தின் முன் வைக்கும் முன்பு, தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழத்தின் தலைவர், எரிசக்தி துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் கடிதம் எழுதி, ''நாங்கள் 20 ஆண்டுகளாக மின்சார மீட்டர்களை மின்பகிர்மானக் கழகத்திற்கு நம்பகமாக வழங்கி வருகிறோம். குறைந்த விலைக்குத் தரமான மீட்டர்களை கொடுக்கிறோம். ஆகவே, எங்களுக்கு மின்சார மீட்டர் வழங்கும் ஒப்பந்தத்தை வழங்க வேண்டும்'' என்று கோரியிருக்கிறார்கள்.

ஆனால், அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டு, அதிக விலைக்கு மின்சார மீட்டர் கொடுக்க முன்வந்த எச்.பி.எல். நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்படவே, அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். இந்த வழக்கில், 'மின் மீட்டர் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் வெளிப்படைத் தன்மையில்லை' என்று குறிப்பிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதற்கு தடை விதித்து இருக்கிறது.

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் ஏற்கெனவே ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடனில் மூழ்கியிருக்கிறது. அதிமுக ஆட்சியில் அதிக விலை கொடுத்து மின் கொள்முதல் செய்ததே, இந்த கடன் சுமைக்கு முக்கிய காரணம். அதனைச் சமாளிக்க அப்பாவி மக்களின் தலையில் மின்கட்டண உயர்வைச் சுமத்தியிருப்பது, ஏற்கெனவே தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 29 லட்சத்திற்கு மேற்பட்ட மின்சார மீட்டர்களை அதிக விலை கொடுத்து வாங்க தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் டெண்டர் விட்டிருப்பது வியப்பளிக்கிறது.

'குறைந்த விலைக்கு வழங்க முன்வரும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்க வேண்டும்' என்ற டெண்டர் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தை மீறும் அளவிற்கு இந்த டெண்டர் விஷயத்தில் அழுத்தம் கொடுத்தது யார்? என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக, நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மின் வாரியத்திற்கு மேலும் ஒரு நஷ்டத்தை ஏற்படுத்தும் விதத்திலும், இந்த அதிக விலையால் நுகர்வோருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தும் விதத்திலும், அதிக விலையில் கொள்முதல் செய்ய முன்வந்திருப்பது கண்டனத்திற்குரியது.

இப்படி, மின் வாரியத்தின் நலனையோ, வாரியத்தின் நிதி நிலைமையையோ, நுகர்வோருக்கு ஏற்படும் நஷ்டத்தையோ கண்டுகொள்ளாமல் அதிக விலை கொடுத்து மின்சார மீட்டரை வாங்குவதால் யாருக்கு ஆதாயம் என்ற கேள்வி எழுகிறது. ஏற்கெனவே சூரிய ஒளி மின்சாரத்திற்கு அதிக விலை, மின் கொள்முதலுக்கு அதிக விலை என்று தத்தளித்துக் கொண்டிருக்கும் மின்வாரியத்தில், இப்போது மின்சார மீட்டர் வாங்குவதிலும் அதிக விலை கொடுப்பதன் மூலம் மின்துறை அமைச்சர் தமிழக நலனுக்காக செயல்படுகிறாரா அல்லது தன் சொந்த நலனுக்காக பாடுபடுகிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆகவே, 29 லட்சம் மின்சார மீட்டர் கொள்முதலில் நடந்த குளறுபடிகள், அதிக விலைக்கு விற்க முன் வந்த கம்பெனிக்கு டெண்டர் கொடுத்தது போன்றவற்றில் மின்வாரியத்தை கட்டாயப்படுத்தியது யார்? குறைந்த விலைக்கு மின்சார மீட்டர் கொடுக்க முன் வந்த கம்பெனியை நிராகரிக்க அழுத்தம் கொடுத்தது யார் என்ற விவரங்களை எல்லாம் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் உடனடியாக வெளியிட வேண்டும்.அதிமுக அரசின் இதுபோன்ற முறைகேடுகளுக்கு மின்பகிர்மானக் கழகத்தை பலி கொடுத்து விடக்கூடாது'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x