Published : 19 Nov 2017 08:20 AM
Last Updated : 19 Nov 2017 08:20 AM

ஜெயலலிதா வீட்டில் 5 மணி நேரம் நடந்த வருமான வரித்துறை சோதனை: 8 பென்-டிரைவ் ஆதாரங்கள் சிக்கின - சொத்துகள், பணப் பரிமாற்றம் குறித்த ஆவணங்களும் கிடைத்ததாக தகவல்

பணப்பரிமாற்ற ஆவணங்கள் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது தெரியவந்துள்ளது. இந்த சோதனையின்போது 8 பென்-டிரைவ்கள், 2 ஹார்டுடிஸ்க் ஆதாரங்களும் சொத்துகள் தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன.

ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகங்கள் உட்பட சசிகலா, திவாகரன், தினகரன் குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் ஜெயா டிவி நிர்வாக இயக்குநர் விவேக், அவரது சகோதரிகள் கிருஷ்ணபிரியா, ஷகிலா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, ஜாஸ் சினிமாஸ் நிறுவன நிர்வாகிகள் ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த ‘வேதா இல்லம்’ வீட்டில் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வந்துள்ளன.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சசிகலா உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியபோதே போயஸ் தோட்டத்திலும் சோதனை நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால், நடைமுறை சிக்கலால் அங்கு உடனடியாக சோதனை நடத்தவில்லை. சசிகலா குடும்பத்தினரிடம் சோதனை நடந்ததில் இருந்தே, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு எங்களின் கண்காணிப்பில்தான் இருந்தது. அந்த வீட்டுக்குள் செல்பவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தோம். அந்த வீட்டுக்குள் இருந்து எதுவும் வெளியில் எடுத்துச் செல்லப்படவில்லை என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த வீட்டில் முக்கியமான ஆவணங்கள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தோம். ஆனால், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், இளவரசியின் மகள் ஷகிலா ஆகியோரிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு போயஸ் தோட்டத்தில் எங்களுக்குத் தேவையான ஆவணங்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டோம்.

இதையடுத்து உடனடியாக 30 அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி சோதனைக்கு தயாரானோம். ஜெயலலிதா வீடு என்பதால் சம்பந்தப்பட்ட பகுதி போலீஸிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தோம். போயஸ் தோட்ட வீட்டில் ஒரு சில இடங்களைத் தவிர அனைத்து இடங்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் 8 பென்-டிரைவ்கள், 2 ஹார்டுடிஸ்குகள் மற்றும் சில ஆவணங்கள் கிடைத்தன.

தேடிய ஆதாரம் கிடைத்தது

முக்கியமான சில நிறுவனங்களின் பணப் பரிமாற்றங்கள் குறித்த தகவல்கள் இதில் இருந்தன. யார், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களும் கிடைத்துள்ளன. பணப் பரிமாற்றங்கள் குறித்த முக்கிய தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. நாங்கள் தேடி வந்த ஆதாரங்கள் கிடைத்துவிட்டன. ஜெயலலிதாவின் அறையில் சோதனை நடத்தவில்லை. அந்த அறையில் முக்கிய ஆதாரங்கள் எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தப்பட்டது அதிமுகவினர் மத்தியில் மட்டுமின்றி, தமிழக அரசியல் வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனையைத் தொடர்ந்து அதிமுகவினர் போராட்டங்கள் நடத்தக்கூடும் என்பதால், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போயஸ் தோட்டம் பகுதியின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x