Published : 17 Nov 2017 07:17 PM
Last Updated : 17 Nov 2017 07:17 PM

சென்னை வருமான வரித்துறை இணையதளம் முடக்கம்: காஷ்மீர் ராணுவ செயல்பாட்டை கண்டித்து வாசகங்கள்

சுங்கத்துறையின் சென்னை மண்டல இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. காஷ்மீரில் ராணுவ செயல்பாட்டைக் கண்டித்து அப்பாவிகள் கொல்லப்படுவதாக வாசகங்களைப் பதிவு செய்துள்ளனர். நான்கு மணி நேர போராட்டத்துக்குப் பின் இணையதளம் செயல்படத் தொடங்கினாலும் முக்கிய டேட்டாக்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சுங்கத்துறையின் சென்னை மண்டல இணையதளம் இன்று காலை 11 மணி அளவில் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. சென்னையின் பிரதான சுங்க செயல்பாடுகள் அனைத்தும் இதில்தான் சேமிக்கப்பட்டிருக்கும். இன்று காலை 11 மணி அளவில் சுங்கத்துறையின் இணையதளம் இயங்கவில்லை. அதை திறக்க முயற்சித்தவர்களுக்கு உங்கள் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது என்று காட்டியது.

இணையதளத்தின் சர்வரை முடக்கிய மர்ம நபர்கள் இணையதள முகப்பில் மோடி சென்று விடு என்ற பொருள் படும்படி வாசகத்தைப் பதிவு செய்து உங்கள் இணையதளம் பாக் சைபர் ஸ்கல்ஸ் மூலம் முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் முகப்பில், ''நீங்கள் எதற்காக முடக்கப்பட்டிருக்கிறீர்கள் தெரியுமா இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 45 1860, பாகம் 2 செக்‌ஷன் 18 என்ன சொல்கிறது என்றால், இந்தியா என்பதன் அர்த்தம் ஜம்மு காஷ்மீர் இல்லாத இந்தியா என்பதே, ஜனநாயக நாடு என்று கூறும் இந்தியா சட்டத்துக்கு விரோதமாக காஷ்மீரில் சாதாரண மக்களை ராணுவம், போலீஸ் மூலமாக கொன்று குவிப்பதற்கு வெட்கப்பட வேண்டும்.

காஷ்மீருக்கு ராணுவ ஆட்சி தேவை இல்லை, குழந்தைகளை கொல்வதையும், பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிப்பதையும், ஆண்களை சட்டவிரோதமாக சிறையில் அடைப்பதையும் நிறுத்துங்கள். அவர்கள் அரக்கத்தனமான இந்திய ராணுவத்திலிருந்து விடுதலையை மட்டும்தான் கேட்கிறார்கள்.

தினசரி இந்திய ராணுவத்தால் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் துன்பத்துக்குள்ளாக்கப்படுகிறார்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். எங்களுக்கு யுத்தம் வேண்டாம். உங்கள் ஆட்களை எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள்'' என்ற வாசகங்களை பொறித்து அதன் கீழ் போஜ்புரி படம் ஒன்றின் தலைப்பை வாசகமாக அடித்து அதன் கீழ் நாங்கள் வேண்டுவது முழு சுதந்திரம், நீங்கள் எங்களைக் கொல்லலாம், ஆனால் எல்லோரையும் கொன்று விட முடியாது, நாங்கள் எப்போதும் விட்டுத்தரமாட்டோம். இவ்வாறு வாசகங்கள் பொறிக்கப்பட்டு உங்களை முடக்கியுள்ளோம் என்று போட்டுள்ளனர்.

பாகிஸ்தானை சேர்ந்த இணைய ஹேக்கர்கள் பெயர்தான் பாக் சைபர் ஸ்கல்ஸ் ஆகும். இணையதளத்தை சீர் செய்வதற்கான நடவடிக்கை தீவிரமாக நடைபெற்ற நிலையில் சில மணி நேரங்களுக்கு பிறகு இணையம் செயல்படத் தொடங்கியது. ஆனாலும் டேட்டாகளை மீட்டெடுப்பதில் சிக்கல் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x