Published : 25 Nov 2017 07:16 PM
Last Updated : 25 Nov 2017 07:16 PM

16 ஆண்டுகளாக ஆர்.கே.நகரை தக்க வைத்துள்ள அதிமுக: 1977 உருவான தொகுதி ஒரு பார்வை

தமிழக சட்டபேரவை தொகுதிகளில் இளைய தொகுதியாக ஆர்.கே.நகர் தொகுதி உள்ளது. அதிக முறை அதிமுக வசமும், கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து அதிமுக வெற்றி பெறும் தொகுதியாகவும் ஆர்.கே.நகர் தொகுதி உள்ளது.

அது குறித்த ஒரு பார்வை:

1977-ல் உருவான ஆர்.கே.நகர் தொகுதி

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 1952-ல் முதல் பொதுத்தேர்தலை சந்தித்த பின்னர் 1957, 1962, 1967, 1971 என ஐந்து பொது தேர்தல்கள் கடந்த பிறகு 1977 ல் முதன் முறையாக ஆர்.கே.நகர் தொகுதி உருவானது. அதிமுகவுக்கும் ஆர்.கே.நகருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டும் சந்தித்த முதல் சட்டப்பேரவை தேர்தல் 1977-ம் ஆண்டு நடந்தது. எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கிய பின்னர் அக்கட்சியின் வேட்பாளர் நடிகர் ஐசரிவேலன் 1977 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகரில் வென்றார்.

தமிழக அரசியல் வரலாற்றில் துணை அமைச்சர் பதவி பெற்ற ஒரே எம்.எல்.ஏ ஐசரிவேலன் தான். அதன் பிறகு 1980 திமுக கூட்டணியில் காங்கிரசும், 1984 ல் அதிமுக கூட்டணியில் காங்கிரசும் இத்தொகுதியை வென்றது. 1989 ல் அதிமுக இரண்டாக உடைந்த நிலையில் திமுகவின் சற்குணப்பாண்டியன் அதிமுகவின் மதுசூதனனை ஆர்.கே.நகரில் வென்றார் . பின்னர் 1991 ல் மதுசூதனன் சற்குணப்பாண்டியனை வென்று அமைச்சரும் ஆனார் . 1996 அதிமுகவுக்கு எதிராக எழுந்த பேரலையில் ஆர்.கே.நகர் மீண்டும் திமுக வசமானது.

மீண்டும் சற்குணப்பாண்டியன் வென்று அமைச்சரும் ஆனார். 2001-ல் மதுசூதனனுக்கு பதில் தற்போது அதிமுகவின் சேகர்பாபு வென்றார். 2006-ல் மீண்டும் சேகர்பாபு வென்றார். பின்னர் சேகர் பாபு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து திமுகவில் மாவட்ட செயலாளராக இருக்கிறார். 2011 ல் வெற்றிவேல் வென்றார். பின்னர் ஜெயலலிதாவுக்காக ராஜினாமா செய்ததை அடுத்து ஜெயலலிதா 2015 ஜூலை இடைதேர்தலில் வென்றார், 2016-ல் ஜெயலலிதாவே மீண்டும் வென்றார்.

2001 முதல் தொடர்ந்து 5 தேர்தல்களில் வென்று அதிமுகவே இத்தொகுதியை தன் வசம் வைத்துள்ளது. இதுவரை நடந்த 9 பொதுதேர்தல்களில் 6 முறை அதிமுகவும் 3 மூன்று முறை திமுகவும் வென்றுள்ளது. 1996 க்கு பிறகு திமுக இங்கு வெல்லவே இல்லை என்பது குறிப்பிட தக்கது. தற்போது ஜெயலலிதா மறைவை ஒட்டி நடக்கும் இடைதேர்தலில் மீண்டும் அதிமுக வெல்லுமா? வாக்காளர்கள் கையில் முடிவு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x