Published : 18 Nov 2017 05:04 PM
Last Updated : 18 Nov 2017 05:04 PM

ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை; அரசு வேடிக்கை பார்ப்பதா?: அன்புமணி ராமதாஸ்

உணவகங்கள் மீதான 18% ஜி.எஸ்.டி. வரி 5% ஆகக் குறைக்கப்பட்டும் உணவு விலைகள் குறைக்கப்படவில்லை, அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கடவுள் வரம் கொடுத்தும், பூசாரி வரம் கிடைக்காத கதையாக மாறியிருக்கிறது உணவகங்கள் மீதான ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு. அனைத்து வகை நட்சத்திர குறியீடற்ற உணவகங்களிலும் உணவு வகை மீதான ஜி.எஸ்டி வரி 18 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பயன்களை வாடிக்கையாளருக்கு வழங்க பெரும்பாலான உணவகங்கள் முன்வராதது கண்டிக்கத்தக்கது.

ஜி.எஸ்.டி வரி குறைக்கப்படுவதற்கு முன்பாக ஒரு வாடிக்கையாளர் ரூ.200-க்கு உணவு சாப்பிட்டால் அதற்கு 18% ஜி.எஸ்.டி சேர்த்து ரூ.236 கட்டணம் செலுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. வரி 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதே உணவுக்காக வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.210 ஆக குறைக்கப்பட வேண்டும். அப்போது தான் ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டதன் பயன் நுகர்வோருக்கு கிடைக்கும். ஆனால், இப்போது உணவின் விலையை 200 ரூபாயிலிருந்து ரூ.225 ஆக உயர்த்தி, அதன் மீது 5% ஜி.எஸ்.டியாக ரூ.11.25 சேர்த்து 236.25 ரூபாயை உணவகங்கள் வசூலிக்கின்றன. ஜி.எஸ்.டி குறைக்கப்பட்ட நிலையில் உணவுக் கட்டணம் குறைக்கப்படாமல் அதிகரிக்கப்படுவது முறையல்ல.

ஜி.எஸ்.டி வரியால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளில் விருந்தோம்பல் துறையும் ஒன்று. உணவகங்களில் பரிமாறப்படும் உணவு வகைகளுக்கு விதிக்கப்பட்ட 18% ஜி.எஸ்.டி வரி அதற்கு முன் வசூலிக்கப்பட்டு வந்த மதிப்புக்கூட்டு வரியைவிட மிகவும் அதிகம் என்பதால் உணவகங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. உணவகங்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி மிகவும் அதிகம் என்பதால் அதைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பிலிருந்தும் எழுந்தது. அதன்பயனாக சரக்கு மற்றும் சேவை வரிவிகிதம் குறைக்கப்பட்ட நிலையில், அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் உணவகங்களே அனுபவிப்பது மிகப்பெரிய மோசடி ஆகும்.

உணவகங்கள் மீதான ஜி.எஸ்.டி 18% ஆக இருந்த போது, உணவுத் தயாரிப்புகான மூலப்பொருட்கள் வாங்குவதற்காகவும், உணவக நிர்வாகத் தேவைகளுக்காகவும் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரிக்கு கணக்குக் காட்டி அதை திரும்பப்பெறும் வசதி இருந்தது. ஜி.எஸ்.டி. இப்போது 5% ஆக குறைக்கப்பட்டு விட்ட நிலையில், மூலப்பொருட்களுக்காக செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை திரும்பப்பெறும் முறையை மத்திய அரசு ரத்து செய்து விட்டதாகவும், அதனால் உணவுத் தயாரிப்புக்கான செலவுகள் அதிகரித்து விட்டதால் அவற்றின் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் உணவகங்கள் தரப்பில் கூறப்படுகிறது. மூலப்பொருட்களுக்காக செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை திரும்பப்பெறும் முறையை மத்திய அரசு ரத்து செய்து விட்டதும், அதனால் உணவுத் தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது என்பதும் ஓரளவு உண்மை தான் என்றாலும், உணவு விலைகளை சராசரியாக 15% உயர்த்தும் அளவுக்கு அதன் தாக்கம் இல்லை. எனவே, உணவகங்களின் விளக்கம் முழுமையாக ஏற்கத்தக்கதல்ல.

மூலப்பொருட்களுக்கு செலுத்தப்பட்ட வரியை திரும்பப்பெறும் முறை (Input Tax Credit - ITC) ரத்து செய்யப்பட்டதால் உணவுத் தயாரிப்பு செலவு 3% முதல் 4% வரை மட்டுமே அதிகரிக்கும். அதற்காக உணவுப் பொருட்களின் விலையை 15% வரை உயர்த்துவது அளவுக்கு அதிகமான லாபம் ஈட்டும் முயற்சியே ஆகும். இப்போது கூட அனைத்து உணவகங்களும் விலையை உயர்த்தவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் உணவகங்களில் தான் கடுமையாக விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி வரி செலுத்தும் சாதாரண உணவகங்கள் விலையை உயர்த்தாமல் ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு பயனை வாடிக்கையாளருக்கு வழங்கும் போது பெருநிறுவனங்களால் வழங்க முடியாது என்பதை நம்ப முடியவில்லை. ஜி.எஸ்.டி வரி 18% ஆக இருந்த போதாவது மக்கள் செலுத்திய வரி அரசுக்கு சென்றது. ஆனால், வரிக்குறைப்பால் ஏற்பட்ட பயனை முழுக்க முழுக்க உணவகங்களே அனுபவிப்பதை அனுமதிக்கக் கூடாது.

ஜி.எஸ்.டி வரிக் குறைப்பின் பயன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க மறுக்கும் உணவகங்கள் மீது தமிழக அரசின் உணவு மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத் துறையும், மத்திய அரசின் கொள்ளைலாபத் தடுப்புத் துறையும் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், இந்த விஷயத்தில் இரு அமைப்புகளும் இதுவரை எச்சரிக்கை கூட விடுக்காதது கண்டிக்கத்தக்கது. ஜி.எஸ்.டி. வரி விகிதம் நடைமுறைக்கு வந்த நான்கரை மாதங்களில் உணவகங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி எவ்வளவு? திருப்பி வழங்கப்பட்ட மூலதனப் பொருட்களுக்கான வரி எவ்வளவு? என்பதை மத்திய அரசால் தெளிவாகக் கண்டறிய முடியும். அதனடிப்படையில் உணவுப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்த வேண்டும். அதேபோல், உணவுகளின் விலையை உயர்த்தினால் வணிகம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதை உணவகங்கள் உணர்ந்து, உணவுகளின் விலையை தாங்களாகவே முன்வந்து குறைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x