Published : 08 Nov 2017 09:15 AM
Last Updated : 08 Nov 2017 09:15 AM

மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு கொண்டாட்டம்

நவம்பர் புரட்சி எனப்படும் ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு நிறைவு தின விழா, சென்னை தி. நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா கொடியேற்றினார். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், கே.நாகராஜன், வெ.ராஜசேகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய என்.சங்கரய்யா, ‘‘சோவியத் புரட்சியால்தான் இந்தியாவின் விடுதலைப் போராட்டம் மகத்தான எழுச்சி அடைந்தது. ரஷ்யப் புரட்சி காட்டிய வழியில் இந்தியாவும் செல்ல வேண்டும். ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் சோஷலிசப் பாதையில் சென்றால் அதன் தாக்கம் உலகெங்கும் எதிரொலிக்கும். இந்தியாவில் இடதுசாரி ஜனநாயகத்தை வலுப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்த வேண்டும். வகுப்புவாத, மதவாத சக்திகளை முறியடிக்க இது அவசியம்’’ என்றார்.

ஜி.ராமகிருஷ்ணன் பேசும்போது, ‘‘பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து இடதுசாரி கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்துகின்றன. கிராமப்புறங்களில் தலைவிரித்தாடும் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும் தொடர் போராட்டங்களை நடத்துவோம்’’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட்

தி. நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நடைபெற்ற நவம்பர் புரட்சி நூற்றாண்டு நிறைவு விழாவில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கொடியேற்றினார்.

‘லெனின் எனும் மனிதர்’ என்ற நூலை மூத்த தலைவர் தா.பாண்டியன் வெளியிட, கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் பெற்றுக்கொண்டார். நவம்பர் புரட்சி நூற்றாண்டை குறிக்கும் கல்வெட்டும் திறக்கப்பட்டது.

விழாவில் பேசிய நல்லகண்ணு, ‘‘வகுப்புவாத சக்திகளையும், தீண்டாமைக் கொடுமை உள்ளிட்ட சமூக அநீதிகளையும் எதிர்த்து இடதுசாரி கட்சிகள் போராடி வருகின்றன. இதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x