Published : 02 Nov 2017 08:50 AM
Last Updated : 02 Nov 2017 08:50 AM

மடிப்பாக்கம், புழுதிவாக்கம், சிட்லப்பாக்கம் பகுதிகளில்:சாலை, தெருக்கள், குடியிருப்புகளில் வெள்ள நீர்

சாலைகள், தெருக்களில் தேங்கிய மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மடிப்பாக்கம், புழுதிவாக்கம், சிட்லப்பாக்கத்தில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேளச்சேரி விஜயநகர் விரிவாக்கம் பகுதி மற்றும் தரமணி செல்லும் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்தப் பகுதிகளில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடங்களின் தரை தளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. மேடவாக்கம் - கீழ்க்கட்டளை இணைப்பு சாலையில் கோவிலம்பாக்கத்தில் சாலையோர மழைநீர் கால்வாய் பணிகள் பாதியில் நிற்கிறது. அதனால் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. செம்பாக்கம், நன்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளின் உபரிநீர் கீழ்க்கட்டளை வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சேர வேண்டும்.

இதற்காக கீழ்க்கட்டளை, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை சந்திப்பின் அருகில் கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாயின் கரைகளை பலப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. அதனால் கால்வாய் வழியாக செல்லும் நீர் மடிப்பாக்கம் லட்சுமி நகர், குபேரன் நகர் வழியாகச் செல்வதால், அப்பகுதிகளில் உள்ள சாலைகளில் ஓரடிக்கும் மேலாக தண்ணீர் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மடிப்பாக்கம் ராம் நகர், புழுதிவாக்கம் சாலைகளில் மட்டுமின்றி வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளதால், பொதுமக்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

ஏரியில் இருந்து உபரிநீர்

நாராயணபுரம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறியதால் பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் ராம்நகர் தெற்கு விரிவாக்கம், ஸ்ரீநகர், மயிலை பாலாஜி நகர், எல்ஐசி நகர் உள்ளிட்ட பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. மேடவாக்கம், பெரும்பாக்கம் பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீர் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.

திருவான்மியூரில் இருந்து அடையாறு செல்லும்போது எல்.பி. நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மழைநீர் கால்வாய்கள்

குரோம்பேட்டை, அஸ்தினாபுரத்தில் பல்வேறு பகுதிகளும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. சிட்லப்பாக்கம் திருமகள் நகர், பாபு தெரு ஆகிய பகுதிகளில் முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட்டு, மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த இரு தினங்களாக வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு மழைநீர், கால்வாய்களையும் தாண்டி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் மழை பெய்தால் பாதிப்பு அதிகமாக ஏற்படும் என்று அப்பகுதி குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு மழைக்கும்

மழை பாதிப்பு பற்றி அவர்கள் கூறும்போது, “சேலையூர் ஏரியின் உபரிநீர், செம்பாக்கம் ஏரிக்கு இந்த வழியாகச் செல்கிறது. இதை தாம்பரம் - வேளச்சேரி சாலையில் கால்வாய் திருப்பி, ராஜகீழ்ப்பாக்கம் சந்திப்பு வழியாக செம்பாக்கத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் தொகுதி எம்எல்ஏ-விடமும் கோரிக்கை விடுத்தோம். ஆனால், ஒவ்வொரு மழைக்கும் எங்கள் பகுதி அப்படியே உள்ளது’’ என்றனர்.

சேலையூர் பகுதியில் உள்ள திருவஞ்சேரியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. செம்பாக்கம் வள்ளல் யூசப் நகர், ஈவேரா நகர், மசூதி காலனி சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x