Published : 26 Nov 2017 08:27 PM
Last Updated : 26 Nov 2017 08:27 PM

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் வடகிழக்கு மாநில பெண்களிடம் அத்துமீறிய இளைஞர்கள் 2 பேர் கைது: மேலும் சிலருக்கு வலை வீச்சு

சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் வடகிழக்கு மாநில பெண்களிடம் ரசிகர்கள் போர்வையில் வந்த இளைஞர்கள் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம் வைரலானதை அடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து இளைஞர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் வடகிழக்கு மாநில பெண்களிடம் ரசிகர்கள் போர்வையில் வந்த இளைஞர்கள் அத்துமீறி நடந்துக்கொண்டதை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து ட்விட்டர், முகநூலில் பதிவு செய்ய அது வைரலாகியது. இதற்கு கால்பந்து அணி உரிமையாளரும் கண்டனம் செய்திருந்தார்.

அன்று நடந்த போட்டியில் சென்னை அணி கை ஓங்கி இருந்தது. மைதானத்தில் பார்வையாளர் மத்தியில் சென்னையின் எஃப்.சி. அணி ரசிகர்களில் சிலர் இதை ஆட்டம் போட்டு கொண்டாடினர். அப்போது வடகிழக்கு அணியின் ரசிகர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் இளம் பெண்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்த அவர்கள் அந்த பெண்கள் இருக்கும் பகுதிக்கு சென்று அவர்களுக்கு முன்னால் நின்று ஆட்டம் போட்டனர்.

ஆட்டம், பாட்டம் என்று கொண்டாட்டத்தில் அத்துமீறி இளம்பெண்களை கேலி செய்யும் விதமாக மோசமாக நடந்து கொண்டனர். இந்த விவகாரம் பெரிதானது, ஊடகங்களிலும் இளைஞர்கள் போட்டோவுடன் செய்தி வெளியானது. இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞர்களை தேடி வந்தனர்.

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், உத்தரவுப்படி, மேற்படி பெண்களை தகாத முறையில் கேலி செய்த நபர்கள் மீது பெரியமேடு காவல் நிலையத்தில் பெண் வன்கொடுமை சட்டத்தின் (Woman Harassment Act) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இளைஞர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் ஓட்டேரி, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் தண்ணீர் கேன் வியாபாரம் செய்யும் விஜய் (எ) தமிழ்செல்வன் (18), மற்றும் அயனாவரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் கார்த்திக் குமார் (20) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் சில இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட வாலிபர்கள் கூறுகையில் சென்னை அணி கோல் அடித்ததும் சந்தோஷமாக இருந்தது. அந்த நேரம் அந்த பெண்கள் ஆங்கிலத்தில் பேசி சிரித்தனர். அதனால் அவர்களை தமிழ்நாட்டில் வந்து ஆங்கிலம்பேசுகிறீர்களா? என்று அவர்களிடம் கேட்டோம்.

அதை பக்கத்தில் உள்ளவர்கள் ரசித்தனர். இதனால் நாங்கள் மேலும் அவர்களை கிண்டலடித்தோம் அதன் பின்னர் வீட்டுக்கு வந்தபோது இந்த விவகாரம் வாட்ஸ் அப்புகளில் வைரலானதை பார்த்து வீட்டில் பெற்றோர்கள் கண்டித்தனர் என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x