Published : 06 Nov 2017 05:14 PM
Last Updated : 06 Nov 2017 05:14 PM

சட்டத்தின் ஆட்சி அல்ல, காட்டாட்சி நடக்கிறது: கார்ட்டூனிஸ்ட் பாலா கைதுக்கு முன்னாள் நீதிபதி சந்துரு கண்டனம்

66(எ) சட்டத்தை உச்ச நீதிமன்றம் நீக்கிய பிறகும் எனக்கென்று ஒரு சட்டம் இருக்கிறது என்று தான்தோன்றித்தனமாக நடக்கும் இந்த அரசு படைப்பாளிகளை கைது செய்கிறது. இதன் மூலம் சட்டத்தின் ஆட்சி அல்ல காட்டாட்சிதான் இங்கு நடக்கிறது என்று முன்னாள் நீதிபதி சந்துரு விமர்சித்துள்ளார்.

ஆட்சியாளர்கள் குறைகளை மக்களிடம் எடுத்துச்செல்வதும் அதை வெளிக்கொணரவும் பல வடிவங்கள் இருந்தாலும் மிகச்சிறந்த வடிவமாக இருப்பது கேலிச்சித்திரங்களே. கேலிச்சித்திரம் எல்லோராலும் வரைந்து விட முடியாது. ஏன் ஒரு ஓவியரால் கூட கேலிச்சித்திரம் வரைய முடியாது.

கேலிச்சித்திரம் ஒருவகை எழுத்தாற்றலே. பல பக்கங்கள் எழுதி சொல்ல முடியாத ஒன்றை ஒரு கருத்துப்படம், கேலிச்சித்திரம் உணர்த்திவிடும். கேலிச்சித்திரங்கள் அடுத்தவர் ரசிக்கும் படியாகவும் அதில் ஆழமாக இடித்துரைக்கும் விஷயமும் இருக்கும்.

கேலிச்சித்திரங்கள் மக்கள் பிரச்சினைகளை, அன்றாடம் சந்திக்கும் இன்னல்களை, அரசின் நடவடிக்கைகள் சாமானிய மக்களை எப்படி பாதிக்கிறது என்று சிறிய சித்திரம் மூலம் உணர்த்துபவை. அதை அனைவரும் ரசிப்பார்கள், அதே நேரம் அது சொல்ல வரும் கருத்து மக்களை சிந்திக்க வைக்கும்.

கேலிச்சித்திரங்கள் பல அரசுகளை அசைத்து பார்த்த வரலாறு உண்டு. ஆர்.கே.லட்சுமண் என்கிற புகழ்ப்பெற்ற கார்ட்டூனிஸ்ட் எல்லா காலகட்டங்களிலும் அனைத்து அரசாங்கங்களையும் தன்னுடைய கேலிச்சித்திரத்தால் வறுத்தெடுத்துள்ளார்.

அவரது அப்பாவி குடிமகன் கார்ட்டூன் இந்தியா முழுதும் பிரபலமானது. கார்ட்டூன்கள் பிரபலமானது இந்திய சுதந்திரத்துக்கு முன்னரே பத்திரிகைகள் இதை கையிலெடுத்துள்ளன. இந்துஸ்தான் டைம்ஸ் என்னும் பத்திரிகை முதன் முதலில் கார்ட்டூன்களை கொண்டு வந்தது.

தமிழகத்தில் கார்ட்டூன்களில் அரசியல் கருத்துக்களை சொன்ன ஆங்கில, தமிழ் பத்திரிகைகள் ஏராளம். தமிழகத்தில் அரசுக்கு எதிராக கேலிச்சித்திரம் வரைந்ததற்காக கைது செய்யப்பட்டவர் ஆனந்தவிகடனின் ஆசிரியர் பாலசுப்ரமணியன். 1987 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் அட்டைபடத்தில் வெளியிட்ட கேலிச்சித்திரத்தை கண்டு அவரை கைது செய்ய உத்தரவிட்டார் அன்றைய வானளாவிய அதிகாரம் படைத்த சபாநாயகர் பி.எச்.பாண்டியன்.

கைதுக்கு எதிராக எழுந்த எதிர்ப்பலையை பார்த்து பணிந்த அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் சபாநாயகரிடம் பேசி அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். இன்றும் பணமதிப்பு நீக்க விவகாரம், டிஜிட்டல் இந்தியா, ஸ்வச் பாரத் என டெல்லியில் ஆளுங்கட்சிக்கு எதிராக கேலிச்சித்திரம் போடும் யாரும் மிரட்டப்பட்டதில்லை. கேலிச்சித்திரத்தின் அடுத்த கட்டமாக தற்போது மீம்ஸ்கள் அவ்வப்போது வரும் அரசியல் நிகழ்வுகளை கிண்டலடிக்கிறது.

மீம்ஸ்கள் அரசியலைத் தாண்டி அனைத்து துறைகளிலும் பயணிக்கிறது. கொஞ்சம் கற்பனை வளம், டெக்னாலஜி, நகைச்சுவை உணர்வு இருந்தால் யாரும் மீம்ஸில் கலக்கலாம் என்று காலம் மாறிவிட்டது.

அரசின் குறைகளை, ஆட்சியின் அவலங்களை, பொதுமக்களின் இன்னல்களை யாருமே சொல்லக்கூடாது, பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டவர்கள் பின்னர் தங்கள் நிலையில் இருந்து பின் வாங்கியதுதான் வரலாறு.

இதே நிலைதான் இன்றும் தொடர்கிறது. கந்துவட்டிக்கு எதிராக கார்ட்டூனிஸ்ட் பாலா ஒரு கேலிச்சித்திரம் வரைந்தார் என்று அவரை கைது செய்ததன் மூலம் அந்த கேலிச்சித்திரத்தை அரசே உலகம் முழுதும் விளம்பரப்படுத்திவிட்டனர்.

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டது பற்றி முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துருவிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்ட போது அவர் கூறியதாவது:

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது பற்றி உங்கள் கருத்து?

கார்ட்டூன் போடுவதால் கைது என்றால் அதற்கு முடிவே இருக்காது.. கார்ட்டூன் என்பது கருத்துச்சுதந்திரத்தின் ஒரு பகுதிதான். பிரஞ்சு பத்திரிகை ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்த ஒரு கார்ட்டூனால் பாரீஸில் பெரிய கலவரமே ஏற்பட்டது.

ஆகவே, ஒரு கார்ட்டூனால் மக்களைத் தூண்டிவிடவும் முடியும், மக்களை திசைப்படுத்தவும் முடியும். பாலா போட்டது அந்த மாதிரியான கார்ட்டூனும் கிடையாது. ஒரு சாதாரண கார்ட்டூன். அதில் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு ஒரு விமர்சனம் செய்துவிட்டு செல்வதை விட்டு, அதன் மீது கைது நடவடிக்கைகள் என்பது சரியில்லை.

அவர் மீது போடப்பட்ட 501 மற்றும் 67(எ) பிரிவு பொருத்தமானது அல்ல. கைது செய்வதற்கும் ஏதாவது முகாந்திரம் வேண்டும், அது போன்ற எந்த முகாந்திரமும் பாலா வழக்கில் இல்லை. அவர் கார்ட்டூனை இப்படி போட்டிருக்கலாம், அப்படி போட்டிருக்கலாம் என்ற பேச்சே தேவையில்லை. அது படைப்பாளியின் சுதந்திரம்.

சமீப காலமாக மீம்ஸ் போடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கிறார்களே?

அதாவது இதற்கு முன்னர் 66(எ) என்று ஒரு பிரிவு இருந்தது.

தொழில் நுட்பச்சட்டம் அது. அந்த சட்டத்தில் ஏகப்பட்ட வியாக்கியானம் இருந்தது. அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரேயா சிங்கல் என்பவர் வழக்கில் அந்த சட்டத்தை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

ஏனென்றால் அந்த சட்டத்தை வைத்து பழிவாங்குவதற்கு பயன்படுத்த முடியும், பேச்சு சுதந்திரத்தை பாதிக்கும் என்று நீக்கி விட்டார்கள். அதனால் 66(எ) க்கும் 67(எ) க்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. ஆகவே 66(எ) இல்லாத போது கார்ட்டூன் போடுபவர்கள் மீதோ மீம்ஸ் போடுபவர்கள் மீதோ நடவடிக்கை எடுக்க முடியாது.

அதனால் என்ன 66(எ) பிரிவு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என் சட்டம், குண்டர் சட்டம் என்று சொன்னால் அது சட்டத்தின் ஆட்சி கிடையாது அது காட்டாட்சித்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x