Published : 29 Nov 2017 03:25 PM
Last Updated : 29 Nov 2017 03:25 PM

போராடும் செவிலியர்கள் மீதான அடக்கு முறை கண்டிக்கத்தக்கது: டாக்டர்.ஜி.ரவீந்திரநாத்

டி.எம்.எஸ் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைக்காக உள்ளிருப்புப் போராட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களது கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். காவல் துறை மூலம் மிரட்டுவதையும்,அடக்க நினைப்பதையும்,பணி நீக்கம் செய்வதாக மிரட்டுவதையும் கைவிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கையில். ''மருத்துவப் பணியாளர் பணிநியமன வாரியம் ( Medical Recruitment Board) மூலம் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 11,000 செவிலியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ,தரவரிசை அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை பணிநியமனம் செய்யும் பொழுதே நிரந்தர அடிப்படையில் நியமிக்காமல் ஒப்பந்த அடிப்படையில் அரசு நியமித்துள்ளது.

அவர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கான ஊதியம்,சலுகை போன்றவற்றையும் வழங்கிடவில்லை.வெறும் ரூ 7700 மட்டும் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. நிரந்தர செவிலியர்களுக்கான பணியிடங்கள் காலியாகும் போது மட்டுமே இச்செவிலியர்களுக்கு பணி நிரந்தரமும், காலமுறை ஊதியமும் வழங்கப்படுகிறது.

பணி நிரந்தரம் பெறுவதற்காக 7 முதல் 8 ஆண்டுகள் வரை காத்திருக்க நேரிடுகிறது. அதுவரை இச்செவிலியர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 500 மட்டும் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இது அப்பட்டமான உழைப்புச் சுரண்டலாகும்.

எம்.ஆர்.பி மூலம் மருத்துவர்களை பணி நியமனம் செய்யும் பொழுதே, அரசு அவர்களுக்கு நிரந்தர மருத்துவர்களுக்கு உரிய ஊதியம், படிகள் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. எம்.ஆர்.பி மூலம், நான்கு மாதங்களுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட 2800 கிராம சுகாதாரா செவிலியர்களுக்கு, பணி நியமனத்தின் பொழுதே காலமுறை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

லேப் டெக்னீசியன், டார்க் ரூம் உதவியாளர், ஆண் மற்றும் பெண் செவிலிய உதவியாளர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் இதர மருத்துவத் துறை ஊழியர்களுக்கும், எம்.ஆர்.பி மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட பொழுதே காலமுறை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், செவிலியர்களுக்கு அவ்வாறு வழங்காதது பாரபட்சமானது. குறைந்த ஊதியத்தில் செவிலியர்களின் உழைப்பைச் சுரண்டும் உள்நோக்கம் கொண்டதாகும்.இது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் செவிலியர்களுக்கும் உடனடியாக பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.· உடனடியாக காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். செவிலியர்களை பணிநியமனம் செய்யும் பொழுதே நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும்.

ஒப்பந்த முறை,தற்காலிக முறை,வெளிகொணர்தல் முறையில் செவிலியர்களை பணிநியமனம் செய்யக்கூடாது. எட்டு மணி நேர வேலை என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட இந்தக்  கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 27-ம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் சென்னை டி.எம்.எஸ் அலுவலகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களது கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். காவல் துறை மூலம் மிரட்டுவதையும், அடக்க நினைப்பதையும், பணி நீக்கம் செய்வதாக மிரட்டுவதையும் கைவிட வேண்டும். தண்ணீர் வசதி, கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இச்செவிலியர்களின் போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ,பொதுமக்களும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறது. அதேபோல், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் சிறப்பு மருத்துவர்களை நேர்காணல் மூலம் நியமித்திருப்பதை கண்டித்தும், அப்பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கடந்த 13 நாட்களாக போராடி வரும் முதுநிலை மருத்துவம் பயிலும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளையும் அரசு ஏற்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x