Published : 20 Nov 2017 11:28 AM
Last Updated : 20 Nov 2017 11:28 AM

கமல் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது: அமைச்சர் ஜெயக்குமார்

ஆதாரமற்ற குற்றங்களை கூறும் நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் ஞயிற்றுக்கிழமை, தமிழக அரசை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். அதை கண்டுபிடித்தப்பின் நிரூபிக்காமல் போவதும் குற்றம்தான். குற்றவாளிகள் நாடாளக்கூடாது” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் கமலின் இந்த ட்வீட் குறித்து இன்று (திங்கள்கிழமை) பட்டினப்பாக்கம் வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "அரசு மீது அபாண்டமான குற்றங்களை சுமத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. எந்தவித ஆதாரம் இல்லாமல் அரசின் மீது குற்றங்களை சுமத்தி வரும் கமல் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது. நடிகர் கமல் யாரின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று வெளிப்படையாகத் தெரிகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது தமிழகத்தை விட்டு ஓடுவேன் என்று முதுகு எலும்பு இல்லாமல் கூறியவர் கமல்.

குணா படத்தில் வருவது போல் கற்பனை கதாப்பாத்திரத்தில் வாழ்ந்து வருகிறார் நடிகர் கமல். கட்சி தொடங்க, தொண்டர்களிடமே பணம் கேட்டவர்தான் கமல். நாங்கள் அனைவரும் உணவில் உப்பு போட்டு சாப்பிடுகிறோம், மலிவான விளம்பரத்துக்காக கமல் செய்யும் உள் நோக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

அரசு ஊழியர்கள் குற்றம் செய்தால் கண்காணிப்பு குழுவிடம் புகார் அளியுங்கள்” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x