Published : 05 Nov 2017 10:01 AM
Last Updated : 05 Nov 2017 10:01 AM

காஞ்சி மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பினால் உபரி நீரை வெளியேற்ற சாலைகளை குறுக்காக வெட்டவும் தயார்: வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பி அதிகளவில் தண்ணீர் வெளியேறும்போது சாலைகளை குறுக்காக வெட்டி அதன் மூலம் தண்ணீரை வெளியேற்ற தயாராகவும் உள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால் தெரிவித்தார்.

கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் கடந்த சில தினங்களாகவே, தொடர்ந்து, வருவாய் அமைச்சர் ஆர்.பி. உதய குமார், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய்த்துறை செயலர் சந்திரமோகன், பேரிடர் மேலாண்மை இயக்குநர் ராஜேந்திர ரத்னு ஆகியோர் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின.

குறிப்பாக சேலையூர் ஏரி, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி, நன்மங்கலம் ஏரி, ஜல்லடியான்பேட்டை ஏரி உள்ளிட்ட தாம்பரம் அருகில் உள்ள ஏரிகள், முடிச்சூர், பெருங்களத்தூர் பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பியுள்ளன. ஏற்கெனவே பல ஏரிகள் நிரம்பி மழைநீர் வெளியேறி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

7 ஐஏஎஸ் அதிகாரிகள்

இதையடுத்து, மேலும் வெள்ள நீர் வெளியேற்றப்படும் என்பதால், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு கூடுதலாக 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் பழனிசாமி, தலைமைச் செயலர் உத்தரவை பெற்று, இதற்கான ஆணையை வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால் வெளியிட்டார். அதன்படி, டி.ஆனந்த். அருண் தயாளன், தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஜான் லூயிஸ், பிரவீண் நாயர், அருண் தம்புராஜ், கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் உடன டியாக பணியில் இணைந்துள்ள தாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது ’’காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 961 ஏரிகளில் பல ஏரிகள் முழு கொள்ளவை எட்டும் நிலை யில் உள்ளன. இந்த ஏரிகள் நிரம்பும்போது, உபரிநீர் வெளியேற்றப்படும். கரையோர மக்கள் வெளியேற்றப்படுவதுடன், உரிய நடைமுறைகளை பின்பற்றி, பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்படும்’’ என்றார்.

சாலை துண்டிப்பு

மேலும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறும்போது, ‘‘தற்போது காஞ்சிபுரத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள 7 அதிகாரிகள் தவிர, தேவைப்பட்டால் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். சென்னையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் அதிகாரிகளுடன் இணைந்து அமைச்சர்கள் பணியாற்றி வருகின்றனர். மழைநீர் தேங்கிய பகுதிகளில் கூடுதல் பம்புகள் அமைத்து வெளியேற்றி வருகிறோம். காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை தண்ணீர் அதிகளவில் வரும்போது, சாலைகளை குறுக்காக வெட்டி அதன் மூலம் நீரை வெளியேற்றவும், தயாராக உள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x