Last Updated : 12 Nov, 2017 12:50 PM

 

Published : 12 Nov 2017 12:50 PM
Last Updated : 12 Nov 2017 12:50 PM

தஞ்சை சரஸ்வதி மஹாலும் சரபோஜி மன்னர் சிலையும்

தஞ்சை மண்ணை பலர் ஆண்டிருக்கலாம். ஆனால், மாமன்னன் ராஜராஜன் போல் தனது ஆட்சியின் அடையாளங்களை அழியாத ஆவணங்களாக வைத்துவிட்டுப் போனது சரபோஜி மன்னர் தான். அவரையும் தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள அவரது பளிங்குச் சிலை குறித்தும் எழுத வேண்டும் ‘தி இந்து - இங்கே.. இவர்கள்.. இப்படி!’ பகுதிக்கான அலைபேசி (044 42890013) எண்ணில் மதுரையைச் சேர்ந்த வாசகர் காந்தி என்பவர் இப்படியொரு தகவலைப் பதிவு செய்திருந்தார்.

தஞ்சையை ஆண்ட மராட்டிய வம்சத்தைச் சேர்ந்த இரண்டாம் சரபோஜி மன்னரைப் பற்றித்தான் வாசகர் காந்தி குறிப்பிட்டிருந்தார். மராட்டிய மன்னர் துளஜாஜி வாரிசு இன்றி இறந்ததும் அமரசிங் என்ற பொறுப்பாளர் அதிகாரத்தைக் கைப்பற்ற சதிவேலைகளில் ஈடுபட்டார். ஸ்வார்ட்ஸ் பாதிரியாரின் உதவியுடன் அந்த சதிகளை முறியடித்து 1798-ல், தஞ்சை மன்னராக பதவியேற்றார் சரபோஜி.

saraboji_1.jpg சரபோஜி மன்னர் சிலை சரஸ்வதி மகாலும் சரபோஜி மன்னரும்

இன்றைக்கு சர்வதேச புகழ்பெற்றுத் திகழும் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் சரபோஜியால் தான் செம்மை பெற்றது. தஞ்சை, வல்லம் நகரங்கள் மட்டுமே இவரது ஆளுகைக்குள் இருந்தன. இந்த நகரங்களின் அப்போதைய மக்கள் தொகை 25 ஆயிரம் பேர் தான். ஆனால், சரபோஜி மன்னர் இறந்தபோது அவரது இறுதி ஊர்வலத்தில் 90 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக ஆங்கிலேயர் எழுதிவைத்த ஆவணங்கள் சொல்கின்றன.

மன்னர் இறந்த நாளில் தஞ்சை மக்கள் யாருமே உணவு அருந்தவில்லை என்றும், மறுநாள் அஸ்தி கரைக்கும் நிகழ்வில் 30 ஆயிரம் பேர் பங்கேற்றார்கள் என்றும் அந்த ஆவணங்கள் சொல்கின்றன. அந்தளவுக்கு தனது ஆளுகைக்கு அப்பால் வசித்த மக்களிடமும் செல்வாக்கு பெற்ற மனிதராக திகழ்ந்தார் சரபோஜி மன்னர்.

தமிழுக்குச் சேவை செய்தார்

மன்னர் சரபோஜியும் அவருக்கு குருவாக விளங்கிய ஸ்வார்ட்ஸ் பாதிரியாரும் கைகோர்த்து சரஸ்வதி மஹால் நூலகத்தை உருவாக்கினார்கள். வடமொழி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளிவந்த இலக்கியம், இசை, மருத்துவம் சார்ந்த ஓலைச்சுவடிகளையும், நூல்களையும் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து இந்த நூலகத்தில் இடம்பெறச் செய்தனர். அப்போதே இங்கு சுமார் 5,000 புத்தகங்கள் இருந்தன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சரஸ்வதி மகால் நூலகத்தின் தமிழ் பண்டிதர் மணி.மாறன், “வடநாட்டுச் சுற்றுப் பயணத்தின் போது கொல்கத்தாவில் சரபோஜி மன்னருக்கு திருக்குறளைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அதன்பிறகு, தஞ்சை திரும்பியதும் saraboji_5.jpg மாறன் right திருக்குறளை முழுமையாகப் படித்து தமிழின் அருமையை உணர்ந்தார் சரபோஜி. இதையடுத்தே, தனது அதிகாரிகளைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி தமிழின் பழமையான ஓலைச் சுவடிகளையும், நூல்களையும் விலைகொடுத்து வாங்கி வரச் செய்தார். அப்படி வாங்கிவந்த பல நூல்களை புதுப்பித்தும் எழுதினார்.

பளிங்குச் சிலை வடித்த ஆங்கிலேயர்

சிறந்த தமிழ் நூல்களை பிறமொழிகளில் மொழியாக்கமும் செய்தார். அதேபோல், மருத்துவம் சம்பந்தமான பிறமொழியின் சிறந்த நூல்களை தமிழிலும் மொழி பெயர்த்தார். நூல்களை வெளியிடுவதற்காக தனியாக ஒரு அச்சுக்கூடத்தையும் தஞ்சையில் நிறுவினார் சரபோஜி. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், உலகின் பல்வேறு நாடுகளின் பிரசித்திபெற்ற இடங்களை ஓவியங் களாகத் தீட்டி அவற்றை மக்கள் பார்வைக்கு வைத்தார். தமிழ் புலவர்கள் பலருக்கும் தமது அவையில் உரிய இடமளித்து சிறப்புச் செய்தார். கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் சரபோஜி மன்னரின் அவையில் தலைமைப் புலவராக இருந்தார். இவரது காலத்தில்தான் அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியை எழுதினார்” என்றார்.

சரபோஜி மன்னர் இறந்தபோது, சரஸ்வதி மகால் நூலகத்தில், சீவகசிந்தாமணி காப்பியம் உள்பட 29 ஆயிரம் ஓலைச்சுவடிகளும், பல்வேறு மொழிகள் சார்ந்த 25 ஆயிரம் நூல்களும் இருந்தன. தமிழ் மொழியின் தொன்மையை உலகறியச் செய்ய அரும்பாடுபட்ட சரபோஜி மன்னரை கவுரவிக்கும் விதமாக ஆங்கிலேயர்கள் அவருக்கு முழு உருவச்சிலை அமைத்தனர். உலகின் தலைசிறந்த சிற்பியான இத்தாலி நாட்டின் பிளாக்ஸ்மேன் இந்தச் சிலையை வடித்தார். சிலையையும் பீடத்தையும் அமைப்பதற்கான பளிங்குக்கல் இத்தாலியில் இிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

குருவுக்கும் சிலை வடிக்க..

சிற்பி பிளாக்ஸ்மேன் சரபோஜி மன்னரின் உயரம், அகலம், கை - கால் நகங்கள் ஆகியவைகூட மிகச் சரியாக இருக்குமாறு சிலையை செதுக்கினார். மன்னரின் காலணி, தலைப்பாகை உள்ளிட்டவைகளை மிகத்துல்லியமாக வடிவமைத்திருக்கிறார் சிற்பி. சட்டை மடிப்பு, சுருக்கங்கள் உள்ளிட்டவைகள்கூட அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. சரபோஜி சிலையின் இடுப்பில் மாட்டியிருக்கும் உடைவாள் உறையிலிருந்து வாளை எடுத்துவிட்டு மீண்டும் செருக முடியும். அதேபோல், மன்னரின் தலைப்பாகையையும் தனியாக கழற்றி மாட்டும்படி மிக நுட்பமாக சிலையை செதுக்கியிருக்கிறார் பிளாக்ஸ்மேன்.

ஆனால், அப்போது பாதிரியார் உடல் நலம் குன்றி இருந்தார். அதனால், பாதிரியாரை சரபோஜி மன்னர் சந்தித்து நலம் விசாரிக்கும் காட்சியை தத்ரூபமாக பிளாக் ஸ்மேன் ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கினார். இந்தச் சிற்பம் தஞ்சாவூரில் சிவகங்கை பூங்கா அருகிலுள்ள ஸ்வார்ட்ஸ் தேவாலயத்தின் சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளது” என்றார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

185 ஆண்டுகள் கடந்தும்..

ஸ்வார்ட்ஸ் சர்ச்சின் ஜெபக்கூடத்தில் இயேசுநாதர் சொரூபத்துக்கு நேர் எதிரேயுள்ள சுவற்றில் அந்தப் புடைப்புச் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. போட்டோ ஃபிரேம் செய்யப்பட்டது போலவே சுற்றிலும் ஃபிரேம் அமைத்து, அதனுள்ளே சிற்பத்தை அற்புதமாக வடித்திருக்கிறார் பிளாக்ஸ்மேன். சரபோஜி சிலை வடிக்கப்பட்ட அதே இத்தாலி பளிங்குக் கல்லில்தான் இந்தச் சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது.

சரபோஜி மன்னர் இறந்து 185 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் தஞ்சை மக்கள் இன்னமும் அவரை நெஞ்சில் வைத்திருக்கிறார்கள். அதனால் தான் இப்போதுகூட தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு சரபோஜி என்று பெயர் வைக்கிறார்கள்!

படங்கள்: வீ.சுந்தர்ராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x