Published : 01 Aug 2023 06:54 PM
Last Updated : 01 Aug 2023 06:54 PM

தி.மலையில் ரூ.200-ஐ நெருங்கிய தக்காளி விலை: மேலும் அதிகரிக்கும் அபாயம்

திருவண்ணாமலை உழவர் சந்தையில் வாங்குவதற்கு யாரும் வராததால் வெறிச்சோடி கிடக்கும் தக்காளி விற்பனை கடை. | இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 200 ரூபாயை நெருங்கி வருகிறது. தமிழக உணவு முறைகளில் தவிர்க்க முடியாத மூலப்பொருள் “தக்காளி”. சாம்பார், ரசம், குழம்பு உட்பட அனைத்து உணவு ரகங்களிலும் தக்காளி சேர்த்து சமைக்கும் பழக்கம் உள்ளவர்கள் தமிழக மக்கள். தக்காளி சட்னி பிரபலம். ஒவ்வொரு உணவு வகையிலும் தக்காளியை சேர்க்கும்போது, அதன் ருசியானது மேலும் கூடும். ஒவ்வொரு குடும்பத்திலும், 150 கிராம் முதல் 250 கிராம் வரை, தக்காளி பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தக்காளி விலையும், தங்கத்தை போன்று உயர்ந்து வருகிறது. 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி, பத்து ரூபாய்க்கு விற்பனையானது. தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில், இதைவிட குறைவாகவும் விற்பனை செய்யப்பட்டது. இதனால், தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள், நஷ்டத்தை சந்தித்தனர். செடிகளில் இருந்து பறிக்கும் கூலி கூட கிடைக்கவில்லை என கூறி, தக்காளி பயிரிட்டிருந்த நிலத்தில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதித்தனர். இந்தளவுக்கு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்திருந்தது.

தென்மேற்கு பருவ மழை தொடங்கியலும், தக்காளி விலையில் மாற்றம் ஏற்பட தொடங்கியது. பத்து ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி, ரூ.30, ரூ.40, ரூ.50, ரூ.80 என கடந்த மாதம் நூறு ரூபாயை எட்டியது. மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, உற்பத்தி குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்பட்டது. விலை வீழ்ச்சியால் நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள், விலை உயர்வுக்கு பிறகு, லாபத்தை ஈட்டி வருகின்றனர்.

தக்காளி விலை உயர்வுக்கு எதிரொலியாக பசுமை பண்ணை கடைகள் மற்றும் நியாய விலை கடைகளில் அறுபது ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், குறைந்த எண்ணிக்கை கடைகளில் மட்டும் விற்பனை நடைபெற்றதால், மக்களை முழுமையாக சென்றடையவில்லை. இதற்கிடையில், தக்காளி விலை கடந்த ஒரு வாரமாக மேலும் அதிகரித்துள்ளது. நூறு ரூபாய்க்கு விற்பனையான தக்காளி விலை, ரூ.120, ரூ.150 என கடந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.180 முதல் ரூ.190 வரை விற்பனை செய்யப்படுகிறது. உழவர் சந்தைகளில் ரூ.160 முதல் ரூ.180 வரை விற்பனையாகிறது. தக்காளியின் தரத்துக்கு ஏற்ப விலையில் மாற்றம் உள்ளன.

தக்காளி வியாபாரிகள் கூறும்போது, “திருவண்ணாமலைக்கு தினசரி 100 முதல் 120 டன் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை நடைபெறும். விலை உயர்வு காரணமாக, தற்போது, தினசரி 50 டன் தக்காளி மட்டுமே கொள்முதல் செய்கிறோம். மூன்று டன் தக்காளி விற்பனையான உழவர் சந்தைகளில், முக்கால் டன்னுக்கு குறைவாகவே விற்பனையாகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, நமது மாவட்டத்துக்கு தக்காளி வரத்து உள்ளன.

தென்மேற்கு பருவ மழையால், விளைச்சல் குறைந்துபோனது. இதனால், விலையும் உயர்ந்துவிட்டது. இப்போது, ஆந்திர மாநிலம் பிரம்மகுண்டா, மதனப்பள்ளி, பலமநேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து உள்ளன. ஒரு கிலோ முதல் ரக தக்காளி ரூ.150 வரை ஏலம் விடப்படுகிறது. இந்த தக்காளியை, நமது பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய முடியாது. இதனால், ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை ஏலம்போகும் சிறிய ரக தக்காளியை கொள்முதல் செய்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

லாரி வாடகை, சேதம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு விலை தீர்மானிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தக்காளி செடிகளில் காய் காய்த்து பழுத்த பிறகுதான் விற்பனைக்கு கொண்டு வர முடியும். இதற்கு ஒரு மாதமாகும். அதுவரை தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை. மேலும் அதிகரிக்கலாம். திடீரென மழை பெய்துவிட்டால், தக்காளி மகசூல் குறைந்துவிடும். உயர்ந்த விலையானது, மேலும் அதிகரிக்கும். இதன் தாக்கம், கார்த்திகை மாதம் வரை நீட்டிக்கலாம்” என்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, “தக்காளி சாகுபடி மற்றும் மகசூலை கணிக்க தமிழக வேளாண்மைத் துறை கணிக்க தவறிவிட்டது. தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். விலை உயர்வுக்கு பிறகு பசுமை பண்ணை கடைகள், நியாய விலை கடைகளில் ஒரு கிலோ தக்காளி, 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதில், சென்னைக்கு மட்டும் அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதர மாவட்டங்களை பெரிதாக பொருட்படுத்தவில்லை.

ஒரு கிலோ தக்காளி இருநூறு ரூபாயை தொட்டதும், மேலும் 500 நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என்கின்றனர். இதனால், பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியாது. விலை உயர்வால், ஒரு நாளைக்கு ஒரு தக்காளி கொண்டு சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தக்காளி சாகுபடியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கையில் வேளாண்மைத் துறை கவனம் செலுத்தினால் மட்டுமே, விலை குறைய வாய்ப்புள்ளது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x