Published : 03 Nov 2017 09:46 AM
Last Updated : 03 Nov 2017 09:46 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடரும் வடகிழக்கு பருவமழையினால் ஏரிகள் மற்றும் அணைக்கட்டுகள் நிரம்பி வழிகின்றன.

தமிழகத்தில் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை, கடந்த மாதம் 29-ம் தேதி இரவு முதல், திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. விட்டு விட்டு பெய்துவரும் இந்த கனமழையினால், ஆவடி, திருநின்றவூர், அத்திப்பட்டு, பொன்னேரி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரதான சாலைகள், உட்புற சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் காலி மனைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கிய வண்ணம் உள்ளன.

மேலும் பூந்தமல்லி, பொன்னேரி, ஆவடி, திருவள்ளூர் அருகே உள்ள மணவாளநகர், புங்கத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசுப் பள்ளி மைதானங்கள் மற்று அரசு அலுவலக வளாகங்களில் மழைநீர் தேங்கி வருகின்றன. தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 1, 269 ஏரிகளில், ஆவடி- கோயில் பதாகை ஏரி, பம்மதுகுளம்-லட்சுமிபுரம் ஏரி உள்ளிட்ட 34-க்கும் மேற்பட்ட ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. ஆகவே, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகள் வறண்டுக்கிடந்த ஆரணி ஆற்றிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பழவேற்காடு அருகே கடலை நோக்கி செல்லும் இந்த ஆரணி ஆற்றின் குறுக்கே கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அன்னப்பன்நாயக்கன் குப்பம் அணைக்கட்டு நிரம்பியுள்ளது.

2.60 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணைக்கட்டு நிரம்பியதால், மதகுகள் மூலம் அருகில் உள்ள ஏரிகளுக்கு உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அதனையும் மீறி, 10 செ.மீ., உயரத்துக்கு மழைநீர் வழிந்து செல்கிறது. அவ்வாறு வழிந்து செல்லும் மழைநீரில், சிறுவர்கள், இளைஞர்கள் நீராடி மகிழ்வதை காணமுடிந்தது.

அதே போல், பொன்னேரி அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள10 அடி உயரமுள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பியுள்ளது. கால்வாய் மூலம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், அம்பத்தூர், கொரட்டூர் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான கால்வாய் மூலம் ரெட்டேரிக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. அந்த நீர் எளிதாக செல்ல வசதியாக புழல் அருகே உள்ள கதிர்வேடு பகுதியில், கால்வாயில் படர்ந்துள்ள வெங்காய தாமரைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.

நீர் நிலைகள் நிரம்பும் வகையில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில், வடகிழக்கு பருவமழையினால் கிடைக்கும் மழைநீரை முழுமையாக நீர்நிலைகளில் சேமித்து வைத்துக் கொள்ள ஏதுவாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள் மற்றும் வரத்துக்கால்வாய்கள் முழுமையாக தூர்வாறப்படவில்லை எனவும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x