Last Updated : 09 Nov, 2017 09:43 AM

 

Published : 09 Nov 2017 09:43 AM
Last Updated : 09 Nov 2017 09:43 AM

காங்கிரஸை ஒதுக்க பார்க்கிறதா திமுக? - கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய கருணாநிதி - மோடி சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் நரேந்திர மோடி திடீரென சந்தித்தது திமுக - காங்கிரஸ் உறவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த 6-ம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் திடீரென சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் இல்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும், சந்திப்புக்குப் பிறகு திமுக - காங்கிரஸ் உறவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்கத்தை கண்டித்து திமுக சார்பில் நவம்பர் 8-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஸ்டாலின் அறிவித்திருந்தார். திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் சு.திருநாவுக்கரசரும் தெரிவித்திருந்தார்.

ஆனால், கருணாநிதி - மோடி சந்திப்புக்குப் பிறகு மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்படுவதாக திமுக அறிவித்தது. இதை ஏற்காத காங்கிரஸ், சென்னையில் 2 இடங்களில் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் தண்டையார்பேட்டையில் பொதுக்கூட்டத்தையும் நடத்தியது.

பண மதிப்பு நீக்கத்துக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நேற்று நடத்திய அரங்கக் கூட்டத்தில் திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், மிக முக்கியமான தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. திமுக முடிவுக்கு மாறாக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தியதும், திமுகவுடன் நெருக்கமாக உள்ள விசிக நடத்திய கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைக்கப்படாததும் தமிழக அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைவராக இருந்தவரை காங்கிரஸ் - திமுக உறவு வலுவாக இருந்தது. திருநாவுக்கரசர் தலைவரான பிறகு பல சிக்கல்கள் ஏற்பட்டன. திருநாவுக்கரசர் அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுகிறார் என திமுகவினர் பேசத் தொடங்கினர். ஆனாலும், பழனிசாமி முதல்வரானதும் பாஜக எதிர்ப்பில் காங்கிரஸும், திமுகவும் தீவிரம் காட்டின. கருணாநிதி - மோடி சந்திப்பு காங்கிரஸ் தலைமையை கோபமடையச் செய்துள்ளது. அதனால்தான் திமுக முடிவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த மேலிடம் அனுமதி அளித்துள்ளது’’ என்றார்.

‘தி இந்து’விடம் பேசிய மற்றொரு காங்கிரஸ் தலைவர், ‘‘தங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரளாமல் பாஜக தடுத்து வருகிறது. இந்நிலையில் கருணாநிதி - மோடி சந்திப்பு நிகழ்ந்துள்ளதை அரசியல் நாகரிகம் என எளிதில் கடந்துவிட முடியாது. உண்மையிலேயே அரசியல் இல்லாவிட்டாலும் இந்த சந்திப்பு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும்’’ என்றார்.

இதை ஆமோதிக்கும் விசிக தலைவர் திருமாவளவன், ‘‘காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளோடும் இணைந்து செயல்பட்டு வரும் திமுகவை முழுமையாக எதிர்நிலைக்கு தள்ளிவிடக் கூடாது என மோடி நினைத்திருக்கலாம். மனிதநேய அடிப்படையில் இந்த சந்திப்பு நடந்திருந்தாலும், இத்தகைய அரசியல் கண்ணோட்டமும் இழையோடுவது கவனிக்கக் கூடியதாகவே உள்ளது’’ என்றார்.

ஆனாலும் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தங்களுக்கு ஏதுவான தலைமை வேண்டும் என திமுக விரும்புவதாகவும், அதற்கேற்ப சில முடிவுகளை திமுக எடுத்து வருவதாகவும் காங்கிரஸ் வட்டராங்களில் பேச்சு எழுந்துள்ளது. மொத்தத்தில் மோடியின் சென்னை வருகை திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x